விடாது தொடரும் அலை

1
1504

“என்ன ஆக போகுதோ, இன்னைக்கு தான் கடைசி நாளா, இன்னையோட எல்லாமே முடிஞ்சுதா, செத்தோம், வந்திருக்கிறது அவங்களா தான் இருக்குமா, இன்னையோட எல்லாமே போயிடுமா” அவள் மனம் துடிதுடித்துக்கொண்டிருந்தது.

பத்து வயது சிறுமி அவள் என்ன தான் செய்வாள் அந்த சமயத்தில் அழுவது ஒன்றை தவிர, தாயின் முக மாறுதலும் பதட்டமும் அவளின் தாய் வாயில் விரலை வைத்து “உஷ் உஷ்” என்று சமிக்ஞை காட்டிய விதமும் அவளின் பயத்தை பல மடங்கு அதிகரித்தது. நெஞ்சினுள் இருந்த இதயம் துடிக்கும் வேகத்தை பார்த்தால் வெளியில் வந்து விடும் போன்ற பிரேமையை ஏற்படுத்தியது. நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு வீட்டின் கதவை யாரோ போட்டு இடித்தால் யாராக இருந்தாலும் பயம் வருவது இயல்பு தான், ஆனால் அவளின் பயத்திற்கு பலமான காரணம் ஒன்று இல்லாமல் இல்லை, போன வாரம் விகடனில் வந்த விநோதமான செய்தி தான் அவள் மனதை பிளிந்து இதயத்தை ராஜபேரிகை போல் சப்த்திக்க செய்து கொண்டிருந்தது, ஆந்திரா போடரில் ஸ்க்ரூ டிரைவர் பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்து கொள்ளையடிக்கும் மிருக கூட்டம் ஒன்று உருவாகியிருப்பதையும் இது வரை பல கொள்ளை சம்பவங்களை அவர்கள் செய்திருப்பதையும் பற்றி அவள் படிக்காமல் இருந்திருந்தால் இத்தகைய உணர்வு அவளுக்கு உருவாகியிருக்க வாய்ப்பில்லை, தானும் அம்மாவும் அப்பச்சியும் மட்டும் தனித்திருக்கும் அந்த கொடிய அமாவாசை இருளில், வீட்டின் கதவுகளை யாரோ இடிக்கும் சப்தம் கேட்டு ஓடி வந்தாள், அறையை விட்டு வெளியே வந்தவள் அங்கு கண்ட காட்சி அவள் பயத்தை மேலும் பலப்படுத்தியது.

தலை விரி கோலமாக முகத்தில் வியர்வை சிந்த தூணுக்கருகில் குறுகி ஒடுங்கி பயத்தில் நடுநடுங்கி கொண்டிருந்தாள் அவளின் அம்மா, கதவு அத்தனை பலமாக இடிக்க படவில்லை இலேசாக தான் தள்ளி தட்டப்பட்டு கொண்டிருந்தது, நீளமாக தொங்கிய அந்த தாழ்ப்பாள் கைபிடி கதவில் மோதி பெரும் சப்தத்தை கிளப்பிக் கொண்டிருந்தது, என்ன தான் செய்வாள் அந்த சிறுமி, “தந்தையாவது இருந்திருந்தால் சற்று தைரியமாக இருந்திருக்கலாம்” என்று அவளின் மனம் எண்ணிக்கொண்டது, அவரை தாண்டி எந்த ஆபத்தும் தம்மை நெருங்காது என்று அவள் பலமாக நம்பினாள், எந்த பெண்ணுக்கும் முதல் கதாநாயகன் அவளின் தந்தை தானே அவள் மட்டும் விதிவிலக்கா என்ன?, “காலம் எங்கள் வாழ்க்கையில் இப்படியா விளையாட வேண்டும், ஏதும் நிகழ்ந்து விட்டால் இனி பாடசாலை செல்ல இயலாது, சாகித்யாவை பார்க்கவே இயலாது,” என்று நினைக்கும் போது அவளை அறியாமலே அவள் கண்களில் கண்ணீர் பீறிட்டது, சாகித்யா அவளின் உற்ற நண்பி, உயிருக்கு மேலான நட்பு என்பதற்கு வரைவிலக்கணமாய் அமைந்தது அவர்களின் நட்பு தான், அப்பேர்ப்பட்ட நண்பியை காண இயலாது என்கிற வலி அந்த பிஞ்சு நெஞ்சில் இத்தகைய ஒரு கொடுமையை ஏற்படுத்தி நிற்பது இயல்பு தான் அல்லவா, “தந்தையாவது இருந்திருக்கலாம் நானும் அம்மாவும் அப்பச்சியும் மட்டும் அப்பச்சி, அப்பச்சி ஐயோ அப்பச்சி வாசலிலே படுத்திருந்தார் அவரை தாண்டாம இங்க வர முடியாது, அப்படினா அப்பச்சி,” இத்தகைய எண்ணம் அவள் மனதில் இலேசாக முளை விடவும் அவளை அறியாமல் விக்கி அழ ஆரம்பித்தாள், “அப்பச்சியை இனி பார்க்கவே முடியாதா,” என்று அவள் மனதில் தோன்றிய அந்த உணர்வு அவளை அப்படி அழ வைத்தது, அவளை பற்றி பிடித்து இழுத்தி மடியில் அமர்த்திய தாய் அவளின் வாயை இறுக்கமாக பொத்தினார், அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது, பாவம் அந்த சின்ன பெண் என்ன தான் செய்வாள், அவளுக்கு ஒரு பக்கம் கோபமாகவும் இருந்தது, தாயின் கையை விலக்கிவிட்டு “அம்மா அப்பச்சி” என்றாள் அவள்,

அம்மா அவளை சத்தம் போடாதே என்று சொல்வது போல் வாயில் விரலை வைத்து சமிக்ஞை செய்து மிக மெதுவாக “ஒண்ணுமில்லை பயப்படாத, அம்மா இருக்கன்ல” என்றாள்
தாயின் மடி, அவள் சற்று பாதுகாப்பாக தான் உணர்ந்தாள், மெதுவாக தாயை நோக்கி
“அம்மா இவங்களையெல்லாம் ஏன்மா சாமி படைச்சாரு” என்றாள்.

“பேசாதடா செல்லம் சத்தம் போடாம இருடா” என்று பாசமாக மெதுவாக நடுங்கிய குரலில் சொன்னாள் அம்மா,
சில நிமிடங்களில் சப்தமும் நின்று போனது அவளின் தாயின் நாசியில் இருந்து தோன்றிய ஆழமான நின்மதி பெருமூச்சு அவளுக்கும் சற்று நின்மதியை அளித்தாலும், திடீரென அவள் மனதில் ஒரு விசித்திர எண்ணம் முளை விட்டது, “ஒருவேளை மொட்டமாடியால ஏறி அது வழியா இறங்கி உள்ள வந்திடுவாங்களோ” பல தடவை நண்பர்களுடன் விளையாடும் போது அவள் அப்படி வந்திருக்கிறாள், அந்த பிஞ்சு நெஞ்சை அந்த எண்ணம் இலேசாக அரித்துக்கொண்டிருந்தது, ஆனால் தாய் மடி அளித்த மென்மை அவளுக்கு பரிபூரண பாதுகாப்பை வழங்குவது போல் உணர்ந்தாள், பயத்தினால் ஏற்பட்ட அயர்வினால் அங்கேயே இருவரும் தூணில் சாய்ந்து கண்களை மூடி தூங்கி போயினர், காலை பொழுது கிழக்கு வெளுத்தது, சேவலும் எக்காளமிட்டு கூவியது, கதவை திறந்த அவளின் தாய் கண்ட காட்சி, கதவில் பெருச்சாளி ஒன்று ஏற்படுத்திய அரிப்பால் இலேசாக சுரண்டப்பட்டிருந்தது, பெருச்சாளி கதவை அரிக்க முற்பட்டதில் அந்த நூற்றாண்டு பழமையான கதவு அதிர்வை ஏற்படுத்தி சப்தித்து இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டாள் அவளின் அம்மா, வெகுசுகதேகியாக அப்பச்சி எதிரில் நின்று கொண்டிருந்தார், “ச்சே பெருச்சாளிக்கா பயந்தோம்” என்று அவளின் தாய் நினைக்கவும், வெளியில் வந்த அவளும் அங்கு நடந்த சம்பவம் தொடர்பான நிலைமையை புரிந்து கொண்டாள், பிறகு என்ன ஒரே சிரிப்பலை தான், இரண்டு நாட்களுக்கு விடாது தொடர்ந்தது அந்த சிரிப்பலை.

முற்றும்.

இதை படிச்சதும் உங்களும் என்ன உணர்வு வேணாலும் வரலாம் சில சமயங்களில் என்னையை கொலை பண்ணினா என்னனு கூட தோணலாம், எதுவா இருந்தாலும் கமன்ட்ல சொல்லுங்கப்பா

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Luxy
Luxy
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice