பறவையும் மனிதனும்

0
1189

நிசப்தமான வீதியில்
சத்தம் தொனிக்க
அங்கும் இங்கும்
தத்தி தத்தி நடந்து
தீனி பொறுக்குது
மாடப்புறா ஜோடி ஒன்று

மைதான ஊஞ்சலிலே
மைனாக்கள் ஊஞ்சலாடுது
கா கா எனும் கரையும் காக்காய்
பார்க்கில் சிப்ஸ் பொறுக்கிட
பள்ளிச் சிறாருக்காய் காத்திருக்கு

ஆரவாரமில்லாத கடைத்தெருவில்
தேவாரம் பாடுது தேன்சிட்டு
சாலையோர மரங்கள் எல்லாம்
பசுமையாக செழித்திருக்கு

நுரை தள்ளும் அலைகடலில்
கரையோரம் செட்டை மடக்கி
செந்நாரையும் மீன்கொத்தியும்
விரைந்தோடி விளையாடுது
சுதந்திர காற்றை சுவாசித்தபடி

செக்கச் சிவந்த வாய் சேவலார்
குட்மார்னிங் சொல்லுது
பக்கவாத்தியம் வாசிக்குது
பக்கத்து வீட்டு சடைநாய்

நிற்க நேரமில்லாமல் காலில்
இறக்கை கட்டிப் பறந்த
இயந்திர மனிதன் இன்று
பயந்து நடுங்கிக் கொண்டு
பதுங்கி கொண்டிருக்கிறான்
விட்டத்தை பார்த்தபடி
வீட்டுக்குள்ளே தனியாய்

ஆகாயத்து பட்சியை கவனித்து பார்
அவை விதைக்கிறதுமில்லை
அதை அறுக்கிறதுமில்லை
களஞ்சியங்களில் சேர்ப்பதுமில்லை
அவைகளை பிழைப்பூட்டுகிறவர்
அனைத்தையும் படைத்த பரம பிதா

காட்டுப்பூக்களை கவனித்துப்பார்
அவை உழைக்கிறதுமில்லை
அவை நூற்கிறதுமில்லை
அவைகளை பார்க்கிலும்
நீங்கள் விஷேஷித்தவர்கள் அல்லவா

விலகியிரு வீட்டிலிரு
விழித்திரு விசுவாசித்திரு
வைரஸ் உன்னை அணுகாது
பொல்லாப்பு உனக்கு நேரிடாது
சர்வவல்லவர் உன்னோடிருக்கிறார்!!

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க