நேசப் பெருங்காடு

0
1123

எல்லாவற்றுக்கும் நானே காரணமென 
என்மேல் பழிபோடு..
மனம்விட்டு என்னை திட்டித்தீர்த்து விடு..
கருணை காட்டாமல் என்னை தண்டித்து விடு..

இன்னும்
உன்னை கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள்..
வெகு நிதானமாகவே என்னை புறக்கணித்திடு..

எத்தனை விரும்பினாயோ அத்தனை தூய்மையாய் என்னை வெறுத்தும் விடு..

இறுதியாய்
மிக இறுதியாய்
ஒருமுறை 
வாஞ்சையாய் வாரி அணைத்துக்கொள்..
உள்ளங்கைப்பற்றி சிறு முத்தமிடு..

எத்தனை உன்னதமாய் நெருங்கி வந்தாயோ அத்தனை உன்னதமாய் விலகிப்போ..

நிற்க..
விலகிய நொடியில்
விலகிச்சுழலும் 
நம் வெவ்வேறு உலகங்களில்
இனி நாம் எதிர்ப்படாமலேயே போகக்கூடும்..

எனினும்
ஏதேனுமொரு 
களைப்பூட்டும் தனிமையொன்றிலோ..
தூக்கமற்ற இரவொன்றிலோ..
நெஞ்சடைக்கும் துக்கமொன்றிலோ..

சிறு ஆறுதல் வார்த்தைக்காய் 
நீ தவித்து நின்றாலோ..
அரவணைக்கும் கரமொன்றுக்காய்
நீ ஏங்கி விட்டாலோ..
உனக்கென யாருமில்லையென 
மனம் கலங்கி 
ஒரு துளி கண்ணீர் சிந்தினாலோ..

அக்கணமே
எரிந்து சாம்பலாகக்கூடும்
என் நேசத்தின் பெருங்காடு!!!

 
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க