தோழமை பேசி…

2
938
mobile-phone-use-in-bed

காலம் எனும் காற்றில்
கடதாசிகளாய் பறந்து போகும்
என் வாழ்நாளில்
இருளில் இட்ட தீபமன்ன
ஸ்னேகமாய் நீ பங்கு கொண்டாய்….

என்னைப் பற்றி யான் தெரிந்ததை விட
நீ தானே அதிகம் அறிவாய்
என்னைச் சேர்ந்த நாள் முதலாய்,
என் வாழ்வின் பெறுமதியான நினைவுகள்
நீ இன்றி முழுமையும் இல்லை
நீ இன்றிய நினைவும் இல்லை


என் வாழ்வின்,
எல்லையற்ற மகிழ்ச்சிகள்
தேற்ற முடியாக் கவலைகள்
அடக்க முடியா அழுகைகள்
தவிர்க்க முடியா நிலைமைகள்
மன்னிக்க முடியாத் தவறுகள்

ஏற்க முடியாத் தோல்விகள்
கடின உழைப்பால் வெற்றிகள்
நிறுத்த முடியாச் சிரிப்புகள்
அனல் பிளம்பாய் கோபங்கள்
தாங்க முடியாப் பிரிவுகள்
மனதில் புதைந்த ரகசியங்கள்
ஈட்ட முடியா இழப்புகள் என இன்னும்…..
இன்னும் பல
உன் முன்றலில் அரங்கேறியவை தானே?…..

உயிரில்லை என்றாலும்
உணர்வுகளின் ஊற்றாய் நீ…..
புலரும் விடியல் ஒவ்வொரு நாளும்
உனது தழுவலை மறப்பதில்லை
புலர்ந்த விடிவுகள் மறையும் போதும்
உன் ஒளி இழப்புடன் அணைந்து போகும்.
என் தேடலின் தாகங்கள் நீக்கிடும்
என் கைகளில் தவழ்ந்திடும் நூலகம் நீ
என் கண்களை தினம் தினம் வாசிக்கும்
என் வாழ்வினை படித்திடும் வாசகன் நீ

என் தேவைகள் கண்முன் காட்டிட
தினம் மின் உணவருந்திடும் போசகன் நீ
என் நேரம் நகர்வதை நான் மறந்திட
என் தாய்க்கு நீ தான் முதல் எதிரி
இருளில் வெளிச்சமாய்
வினாவில் விளக்கமாய்
சிறந்த வழிகாட்டியாய்
நாளெலாம் என்னோடு பயணித்திடும்
என் உற்ற நண்பா!
நீ அன்றி இக்கவியும் கண்களை எட்டாது……

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
2 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Kasthury Sothinathan
Kasthury Sothinathan
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அனைவருக்கும் பொருந்தும் படைப்பு.
அருமை
வாழ்த்துக்கள்