தாயே…!

0
655

 

 

 

 

அம்மா…
உன்னை நினைக்கும்
போது எனக்குள்
எல்லா நரம்பும் இரத்தத்தை
கடத்தவில்லை – உன் உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ….!!!

பிள்ளை பருவத்தில்
செல்ல காயம் வந்தால் கூட
விளையாட்டுக் காயங்களாக
எடுக்காமல் -உன் கண்ணுக்கு
திரியை வைத்து விடிய விடிய
விளக்காய் எரிவாயே
தாயே ….!!!

சிறு வயதில் எல்லோருக்கும்
பசியதிகம் -பள்ளி விட்டு வந்து
படாத பாடு படுத்திவிடுவேன்
உன் காலை உணவை எனக்காக
வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய்
தாயே ……!!!

என் புத்தகச் சுமை
உன் வலது தோளில் சுமப்பாய் …
செருப்பில்லாத பாதங்களேடு….
இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய்.
வீடு வந்தவுடன் களைத்து விட்டாய்
மகனே என்று -உன் களைப்பை
பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு
தாயே …..!!!

அ – வரிசையில் சொற்கள் சொல்லடா
அம்மா என்பேன் -உலகிலேயே
அப்படி சொன்ன முதல் பிள்ளை
என்பது போல் இனிமேல் யாரும்
சொல்ல மாட்டார்கள் என்பது போல்
உள்ளம் குளிர்வாய் ..
தாயே …..!!!

நான் பெற்ற சின்ன வெற்றிகளை
உலகசாதனைபோல் ஊர் முழுக்க
தம்பட்டம் அடிக்கும் -உன்
கதையை மற்றவர்கள் -அலட்டல்
என்று சொல்வார்கள் -எனக்கு
அதுதான் தாயே எனக்கு -உன்
ஊட்ட பானம்
தாயே ….!!!

வேலை தேடும் வயதில்
வெறும் கையோடு வருவேன்
எல்லோர் முகத்திலும் சோர்வு
தாயே -உன் முகத்தில் மட்டும்
எதுக்கடா கவலை படுற
நாளை கிடைக்குமடா மகனே
என்று – ஆறுதல் கரமானது
நீட்டியது உன்னை தவிர யார்
தாயே ……!!!

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீயோ உயிரை உருக்கி மகிழ்ந்தாய்
முதல் காசு எடுத்து உன்
முந்தானையில் முடிந்து
கோயிலுக்கு அர்ச்சனை செய்தாயே
தாயே …..!!!

எப்படியெல்லாம் வாழ்ந்த நான்
இப்போ தாயே நீயில்லாமல்
வாழும் உலகம் – மனிதரே
வாழாத செவ்வாய் கிரகத்தில்
வாழ்வதுபோல் இருக்கு
தாயே ….!!!

தாயே உன்னைப்போல்
போலியில்லா முகம் வேண்டும்
எதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்
தியாகத்தில் எல்லையற்ற கடலே
மறுபடியும் உனக்கு மகனாய்
நான் பிறக்க வேண்டும் வா …
தாயே …..!!!  

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க