ஜீவிதம்

0
1651

டெலீஷா நீ இன்று
அதிகம் அழகாய் இருக்கிறாய்
அவன் 
அந்த வார்த்தைகளை
சொல்லி முடிப்பதற்குள்
வெட்கத்தோடு அதிகம்
போராட வேண்டியிருந்தது
அவள் ஆச்சரியத்தை
அடக்கியபடி மென்மையாய்
புன்னகைத்தாள்

அவனின் முகத்தில்
பரவியிருந்த டென்ஷனை
பார்க்கையில்
அவளுக்கு வியப்பாயிருந்தது

இத்தனை வருட
பரிட்சயத்தில்
முதன் முதலாய் அவளை
பாராட்டியது
அவளுக்கு மிகவும்
சந்தோஷமாகவுமிருந்தது

அவன் கைகளைப் பற்றி
மென்மையாய்
வருடிக் கொடுத்தாள்
அவனுக்கு அந்த ஸ்பரிசம்
அந்த நேரத்தில்
தேவைப்பட்டாற் போலிருந்தது
மெதுவாய் கைகளை
விடுவித்துக் கொண்டு
தன்னிடமிருந்த
பையிலிருந்து
தான்
பத்திரப்படுத்தியிருந்த
ஒரு டெய்சி மலரை
நீட்டினான்

அவளுக்கு
அது மிகவும் பிடிக்கும்
என்பதை
நினைவாய் வைத்திருந்து
பரிசளித்தது
அவளுள் கிளர்ச்சியை தூண்டியது

இன்னும் சிறிது நேரத்தில்
அவர்கள் சந்திப்புக்கள்
முற்றுப் பெற்று விடும்
என்பதை இருவரும்
உணர்ந்திருந்தாலும்
அந்த ஞாபகம்
வந்த போதெல்லாம்
அதைப் பற்றி பேசாமல்
மௌனத்தைக் கொண்டு
நிரப்பிக் கொண்டிருந்தனர்

அவன் தலையை
குனிந்து கொண்டிருந்தான்
அவன் பார்வை
தாழ்த்தப்பட்டிருந்தது

அவளுக்குத் தெரியும்

அவன்
அழுது கொண்டிருக்கிறான் என

அவள்
அவனுக்குப் பின்னால் வந்து
நெருங்கியபடி
நின்று கொண்டாள்

ஜலால்

அவன் மேலும் பார்வையை
தாழ்த்திக் கொண்டான்
அவள் கைகள்
அவன் கேசத்தை அலைந்து கொண்டிருந்தன

அதற்கு மேலும் முடியாதவன்
போல
அவள் இடையை
கட்டிக் கொண்டான்

“டெலீஷா
என்னால் இங்கிருந்து போக
முடியாது
நான்
இறந்தவனைப் போலாகி
விடுவேன்
எனக்கு இத்தனை பெரிய
தண்டனையை
என் வாழ்நாள் முழுமைக்கும்
தந்து விடாதே
நான் போக மாட்டேன்”

ஒரு குழந்தையின்
பிடிவாதத்தோடு
கைகளை இறுக்கிக் கொண்டான்

“ஜலால்
என் மேல்
நீ நிஜமான மரியாதை
வைத்திருந்தால்
நீ போய்த்தான் தீரணும்”

அவள்
அவன் கைகளை
தன் இடையிலிருந்து
பிரித்து விட்டு
அவன்
ஆடைகளையும் கேசத்தையும்
ஒழுங்குபடுத்தியபடி
சக்கர நாற்காலியை
தள்ளத் தொடங்கினாள்

“ஜலால்
வெளி உலகம் அழகானது
நல்லவர்களாலும்
நல்ல விடயங்களாலும்
நிரம்பியது
இத்தனை வருடங்கள்
நீ இருந்த இடத்தைத் தாண்டி
நீ நீயாக வாழணும்
உன்னை ஆராதிக்க
உனக்கென உறவுகள்
எத்தனையோ இருக்கும் போது
நீ இங்கிருப்பது
இனியும்
உத்தமம் அல்ல
நான்
தர்மம் தவறியவளாக
முடியாது ஜலால்”

அவர்கள் பேசியபடி
அவனை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தவர்களை
நோக்கி சென்றார்கள்

ஜலாலின் சாயல்
கொண்ட பெண் வந்து
அவனை
கட்டிக் கொண்டாள்
டெலீஷாவின்
கையைப் பிடித்தபடி
நன்றி சொன்னாள்

“இந்த பத்து வருடங்களாய்
இவனைத் தேடாத இடமில்லை
விபத்தின் பின்
இல்லை என்று நினைத்து
எங்கோ இருப்பான் என்ற
நம்பிக்கை வளர்த்து
அது நலிந்து போய்க் கொண்டிருக்கையில் நீங்கள் தெய்வம் போல்
உதவியிருக்கின்றீர்கள்”

அவள் டெலீஷாவை
கட்டிக் கொண்டாள்

ஜலால் மனம்
குழம்பிக் கிடப்பது
அவன் முகத்தில் தெரிந்தது

டெலீஷா அவன் முன் போய்
மண்டியிட்டாள்

அவன் கண்களில்
தெரிந்த வேதனை
அவளுக்கு வருத்தமளித்தது

“என்னோடு வந்து விடு
டெலீஷா”
அவன் குரல்
ஆற்றாமையின் விளிம்பில்
நின்று கொண்டிருந்தது

இத்தனை வருடங்கள்
தன் குழந்தையாய்
பாவித்தவனை
பிரிவதின் துக்கம்
அவள் தொண்டையை
கட்டிப் போட்டது

எதுவுமே பேசாமல்
அந்த முப்பது வயது
மகனின்
கன்னத்தில் முத்தமிட்டாள்
அந்த முதிர் கன்னித் தாய்…..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க