செர்ரி மலருக்கு கொண்டாட்டம்

0
1090

 

 

 

 

செர்ரி மரங்கள்  ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான –Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும்.  ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை  அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர்.

 செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும்.  ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும்  வகைக்கேற்றபடி காணப்படும்.

ஜப்பானியர்கள் இதை சகுரா அல்லது ஊமி மரம் (Umi) என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக  (sato zakura)  சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள்  யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை  யேசகுரா (yaezakura) என்றும் அழைக்கப்படுகின்றன.   இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862ல்  ஜப்பானிலிருந்து  வட அமெரிக்காவிற்கு G.R. Hall  என்பவர் கொண்டு வந்தபின்னர் அங்கும் இவை வளர்கின்றன.

Prunus serrulata  எனப்படும் செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவை தாயகமாக கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம்   26–39 அடி வரை (7.9–11.9 m). வளரும் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரஙகள் எனப்படும்  lenticels நிறைந்தும் காணப்படும். இலைகள்  ஓரங்களில் பற்கள்போன்ற அமைப்புடன் எதிரடுக்கில்  நீள்முட்டை வடிவிலிருக்கும். மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மிமி அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதிலும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில்  வளர்க்கப்படுகின்றன

இம்மரங்கள் வருடா வருடம்  பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக  ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது.. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாக பூத்துக்குலுங்கி பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தை சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.

 

 

 

ஒவ்வொரு வருடமும்  ஜப்பானிய வானிலை தகவல் தளத்தில் பல்வேறு பிரதேசத்திலும் பூப்பூக்க தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.. ஹனமியின் போது பூத்துக்குலுங்கும்  செர்ரி மரங்களுக்கு கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். இரவில் நடத்தப்படும் ஹனாமி யோசகுரா (இரவு நேர சகுரா) எனப்படும். இதன் பொருட்டு வண்ணமயமான விளக்குகள் பூங்காக்களில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும்  காலத்தில்,  நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை  விடுமுறை விடப்படுகிறது,  இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும்  ஓய்வெடுத்தும்  மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள், 

பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு  வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான  ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக்காண  உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்.

இங்கு  100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடபட்டுள்ளது. பல நாடன் பாடல்களும் பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் கால்த்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுபுத்தகங்கள், குடைகள், அலங்காரப்பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு  சகுரா என்று பெயரிடுகிறார்கள்.

ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா,  வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின்  பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

ஹனாமியின் சிறப்பு உணவு வகைகள்

  • “cherry blossom sake,” – சகுரா மலர்கள் மிதக்கும் அரிசி மது
  • சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேனீர், சோயா பால் மற்றும் கோலா
  • Hanami bento – ஹனாமி பெண்டோ எனப்படும் வறுத்த மீன் துண்டு,பொறித்த காய்கறிகள், போன்றவைகள் இருக்கும் மதிய உணவுப்பெட்டி
  • Finger food எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால் , சுஷி மீன் மற்றும் சமைத்த காய்கறிகள்
  • sakura mochi எனப்படும் சகுரா இலைகளால் சுற்றி வைக்கபட்டிருக்கும் சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும் ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகள்
  • மஞ்சள் கலந்த குடிநீர்

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க