சிறையிருக்கும் மூளை

0
725
yann-houri

 

 

 

 

 

பிறப்பும் இறப்பும் 
இடைநடுவே ஒரு 
சுயமில்லாத என் வாழ்க்கை 
இருவர் தெரிந்து செய்த  
விபத்து ஒன்று 
நினைத்திராக் கனத்தில் நிகழும் 
விபத்து ஒன்று. 

நான்கு கால் மனிதனாய் 
தவழ்ந்து மறைந்த காலம் 
என் சிந்தனை எனக்கானது. 
என் செயல்கள் 
இரு கரங்கள் எனும் வேலியை 
தாண்ட முடியாப் பறவைகள் 
அன்னையின் அன்புச் சிறை 
நான் உரு ஆகும் முன்பே 
கருவானது. 

நாட்கள் தவழ்ந்தது. 
வார்த்தைகள் உதட்டில் புரண்டது. 
என்னையறியாமல் ஓர் இருளுக்குள்  
நான் மாட்டிக்கொண்டேன். 
அதுதான் மாயை வெளிச்சம் 
நான் பயின்ற கல்விமுறை 
அதுவோர் காலனியச் சாபம். 

புரிந்து கொண்டேன் 
புரிந்தும் பயன் புரிந்தது மட்டும்தான். 
என்னை மீட்க முடியாத சகாக்கள்தான் 
என்னோடு… 

போலி நம்பிக்கைகளும், பித்தலாட்டங்களும் 
குவிக்கப்பட்டு  
என் மீது கணத்துவிட்டது. 
மீட்கும் தருவாயில் 
பித்தன் என பட்டம் கிடைக்கும் 
உண்மையான பித்தர்களிடமிருந்து. 

அவசியங்கள் அநாகரிகமாக்கப்பட்டது. 
அநாகரீக நாகரீகம் அவசியமாகிவிட்டது. 
அறிவு மட்டும் இயங்கும் 
என் பகுத்தறிவை கொன்றுவிட்டது. 
தொடரும் ஆக்கிரமிப்பும் 
பாடசாலை பிரம்பும். 

சுயநலத்தில் மட்டும் தான் 
சுயமாக சிந்திக்கிறேன் 
மிகுதி நேரம் 
என் மூளை சுய சிந்தனையற்று 
அடிமையாகிவிட்டது. 
‘இறுக்கமாக கட்டப்பட்ட 
கம்பு குச்சிகள்’ 
ஹிட்டலரின் வாசகம்  
அது அழிந்து வரலாறாகிவிட்டது. 

கட்டுடைத்து கட்டவிழ்க்க 
இங்கு 
பல இறுக்கமான கயிறுகள் உண்டு 
எல்லாமே  
என்னை நேர்மையாக ஏமாற்றிக்கொண்டிருகிறது.  
கேள்விகளுக்கு பதில் மட்டும் கூறி 
ஏமாந்து போனேன் 
பதில்களிலிருந்து  
பல கேள்விகள் எழும் இனி…. 

அவை கேள்விகளையே கேள்வி கேட்கும் 
பதில்கள் ஒவ்வொன்றும் 
புதிர் கயிறுகளை தகர்த்தெறிய 
தயாராகும். 
பிறப்பும் இறப்பும்  
இடை நடுவே ஒரு 
சுயமில்லாத என் வாழ்க்கை 

நான் மட்டுமல்ல  
நம்மில் பலர் 
தன்னை தான் அடிமையாக்கி 
மூளையை சிறைவைத்து 
மூடனாகிவிட்டோம். 
கல்லறைக்கு 
கைதியாகும் முன்னமே 
நம் சொல்லறையை திறந்திடுவோம் 
சிந்தனைக்கு சிறகளிப்போம். 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க