சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21

0
1114

இரகசிய ஆலோசனை

வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறு கோட்டை போலவே தோன்றிய அந்த கட்டடத்தின் உட்பகுதியானது, யாரும் சொப்பனத்தில் கூட எண்ணிப்பார்க்க இயலாதவாறு பெரும் அரசவையின் ஆலோசனை மண்டபம் போலவே அமைக்கப்பட்டிருந்ததன்றி, தான் அமரவைக்கப்பட்டிருந்த அந்த பீடமும் கூட ஏதோ அரியாசனம் போலவே அமைக்கப்பெற்றிருந்தமையானது அந்த மனிதருக்கு பெரும் வியப்பையே அளித்துக்கொண்டிருந்ததாகையால், அந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் அமையப்பெற்றிருந்த அந்த பீடத்தில் அமர்ந்திருந்த அந்த மனிதர் தன் கண்களை சுழல விட்டு அந்த மண்டபத்தை ஒரு முறை நன்கு ஆராயவும் செய்தார். அந்த மண்டபத்தின் சுவர் நெடுகிலும் வைக்கப்பெற்றிருந்த தீவர்த்திகளில் இருந்து பிறந்த அந்த ஒளியானது அந்த மண்டபத்தையே செந்நிறமும் மஞ்சலும் கலந்து அக்னி வர்ணமாகவே அடித்துக்கொண்டிருந்ததுடன், அந்த நடுநிசிப்பொழுதிலே அத்தனை தூரம் அலைக்கழிந்தே அந்த மண்டபத்தை அடைந்திருந்தாரென்றாலும் முகத்திலோ உடலிலோ களைப்பு என்கின்ற உணர்வுக்கோ தளர்விற்கோ அணுவளவும் இடம் தராமல் கம்பீரமாகவே அமர்ந்திருந்த அந்த மனிதரின் வீர வதனத்திலும் மேனியிலும் கூட அந்த தீவர்த்தியின் ஒளியானது பட்டு அவற்றையும் பொன்னிறமாய் ஜொலிக்க செய்து அவரின் கம்பீர தோற்றத்தை மேலும் பல மடங்கு உயர்த்தியே காட்டிக்கொண்டிருந்தது.

அவ்வாறு அந்த மனிதர் மிக கம்பீரமாகவே அமர்ந்து அந்த மண்டபத்தை நோக்கிக்கொண்டிருக்கையில், வாயிலருகில் ஏதோ சில சலசலப்பு சப்தங்கள் கேட்கவும், அந்த மனிதர் சடுதியாக திரும்பி வாயிலை நோக்கவும், மண்டபத்தின் வாயிலூடாக திடகாத்திர தேகிகளான பத்து பன்னிரண்டு பேர் வரிசையாக உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்ததை அவதானித்ததன்றி, அவர்களில் முதலாவதாக உள்ளே நுழைந்தவன் முன்னரே தன்னை வழிகாட்டி அழைத்து வந்த அதே வீரன் தான் என்பதையும் அந்த மனிதர் இனங்கண்டும்கொண்டார்.

அவ்வாறு உள்ளே நுழைந்தவர்கள் அனைவரும், அங்கே இயலவே அமர்ந்திருந்த அந்த மனிதரின் முன்னால் வந்து அமைதியாக நிற்கவும், சரேலென ஆசனத்தை விட்டு எழுந்த அந்த மனிதர், அவர்கள் அனைவர் மீதும் ஆராய்ச்சிப்பார்வையொன்றை கணநேரம் செலுத்தவும் செய்தார். அந்த மனிதரின் கண்களானது காந்தம் போலவே இழுப்பதையும், அவை பயங்கர அழகாய் இருப்பதையும், அவரின் முன்னால் நின்றிருந்த அத்தனை பேரும் அவதானிக்கவே செய்தார்களாகையால், அவரின் முகத்தில் தோன்றிய அந்த இனம் புரியாத கவர்ச்சியில் ஆட்பட்டு விட்டதன் பயனாக அவர்கள் அனைவருக்கும் அந்த மனிதரின் பேரில் இனம்புரியாத மரியாதையும் சிரத்தையும் உருவாகவே செய்திருந்தது.

சற்று முன்னர் இருளிலே அவரின் முகத்தை சரிவர கவனித்திராத அந்த வீரனும் கூட தற்சமயம் தீவர்த்திகளின் ஒளியில் குறித்த மனிதரை பார்த்ததும் “இவரின் கண்களில் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது” என்று மனதினுள் எண்ணியும் கொண்டானானாலும் அவ்வாறு உள்ளே நுழைந்தவர்களில் முதலில் அந்த வீரனே பேசவும் தொடங்கி தன்னுடன் வந்த அந்த மனிதர்களை ஒவொருவராக சுட்டிக்காட்டி அறிமுகம் செய்யவும் தொடங்கினான்.

அங்கே அந்த வீரனை தவிர முள்ளிமாநகர்வன்னியரும் திருமலைவன்னியரும், புத்தளத்துவன்னியரும், மட்டுமாநகர்வன்னியரும் வேறு பல சிற்றரசர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒவொருவராக அந்த வீரன் அறிமுகம் செய்து முடித்ததும், அந்த மனிதரை சுட்டிக்காட்டிய அந்த வீரன் தன்னுடன் வந்தவர்களை நோக்கி “இவர் தான் சிங்கை மன்னர் கனகசூரியச்சக்கரவர்த்தியின் மூத்த புதல்வர் முடி இளவரசர் பரராசசேகரர்” என்று அறிமுகம் செய்தும் வைத்தான். அங்கிருந்த அத்தனை பேரையும் அமரும்படி சைகை செய்த பரராசசேகரர், தானும் தன் இருக்கையில் அமர்ந்தும் கொண்டார். பின் அங்கிருந்த அனைவரையும் நோக்கி

“நாம் அனைவரும் இங்கு எதற்காக கூடியிருக்கின்றோம் என்று தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்” என்றார் தன் வசீகரமான குரலில்.

“ஆம்.. ஆம்..” என்ற ஆமோதிப்பு குரல் கூட்டத்தினூடாக ஒருங்கே எழுந்தது.

“இச்சிங்கை ராசதானி செண்பகப்பெருமாளால் கைப்பற்றப்பட்டு கோட்டை ராசதானியின் கீழ் வந்த பின்னர் வன்னியர்களாகிய எங்களின் அதிகாரமும் பறிக்கப்பட்டு விட்டது இளவரசே! எம்மால் சுகந்திரமாக செயல்பட இயலவில்லை அதை விட ஒரு சிற்றரசருக்குரிய அங்கீகாரம் கூட எமக்கு வழங்கப்படவில்லை” என்றார் திருமலைவன்னியர் துயரம் குரலிலும் தொனிக்க.

“ஆம் இளவரசே” என்று அதை ஆமோதித்தார் மட்டுமாநகர்வன்னியர்.

“இச்சிங்கை ராசதானி உருவாகி இத்தனை காலமாக ஒரு போதும் சிங்கள ராசதானிக்கு அடங்கி இருந்ததில்லை, இந்த பதினேழாண்டுகள் அடிமை வாழ்க்கை என் இதயத்தை கனக்க செய்கிறது” என்றார் புத்தளத்துவன்னியர்.

ஏதோ பலமான சிந்தனையில் ஆழ்ந்தவர் போலவே தன் கண்களை மண்டபத்தின் மேற்கூரையை நோக்கி செலுத்திய படியே இருக்கையில் சாய்ந்த இளவரசர் ஏதோ சொப்பனத்தில் கதை சொல்பவர் போலவே மெல்ல பேசவும் ஆரம்பித்தார்.

“இந்த சம்பவம் தாங்கள் அனைவரும் அறிந்தது தான், நான் எனக்குள்ளேயே இச்சிங்கை நகரை மீட்க வேண்டி உத்வேகத்தை உண்டாக்க இந்தக்கதையை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வேன், இம்முறை இக்கூட்டத்தில் உங்கள் அனைவருக்கும் அந்த கதையை ஒரு முறை நினைவு படுத்த விரும்புகின்றேன், முன்பொருநாளில் மலையவம்சத்தை சேர்ந்த அழகக்கோணன் என்பவன் கோட்டை ராசதானியை கட்டமைத்து ஆட்சி செய்ய ஆரம்பித்தான். அக்காலத்தில் சிங்கை மன்னராக இருந்த செயவீரசிங்கையாரிய சக்கரவர்த்தி, அழககோணனிடம் திறை கேட்டு தூது ஒன்றையும் அனுப்பினார். ஆனால் அவனோ தூதனை கொலை செய்து மன்னரிடம் பகை கூட்டியதன்றி, போருக்கும் அழைத்தான். சினம்கொண்ட சிங்கை மன்னர் தம் படைகள் எல்லாம் திரட்டி அவனின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து அவன் மீது போர் தொடுத்து, அவனை வென்றதன்றி, அவ்வெற்றியை கோட்டகம என்னும் சிங்களநகரிலேயே 

‘கங்கணம் வேற்கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப்

பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் − பொங்கொலிநீர்ச்

சிங்கை நகராரியனைச்சேரா வனுரேசர் தங்கள் மடமாதர் தாம்’

என்று சிலாசனமாக பொறித்துவிட்டும் மீண்டார். அத்தகைய வீரர்கள் ஆண்ட இம்மண் இன்று அந்நியர்கள் கையில் சிக்குண்டு கிடப்பது எத்தனை பெரும் அவமானம். இந்த அவமானம் என் நெஞ்சை எப்பொழுதும் வாட்டி வதைத்துக்கொண்டேயிருக்கிறது. மீண்டும் இம்மண்ணை மீட்டெடுக்கும் வரை எனக்கு உறக்கம் என்பதே இல்லை” என்று உணர்ச்சி பொங்க கூறிமுடித்தார் இளவரசர்.

“எங்களின் விருப்பமும் அதுவே” என்றார் திருமலை வன்னியர்.

அதற்கு மற்றவர்களும் ஏக காலத்தில் “ஆம் இளவரசே!” என்று கூறி தம் ஆதரவையும் வெளியிட்டார்கள்.

“சிங்கை நகர் என் ஆட்சிக்கு கீழ் வந்து விட்டால் நான் இயலவே கூறியது போல் தாங்கள் திறை செலுத்தி சுயாட்சியை மேற்கொள்ள பூரண அனுமதியை அளிக்கின்றேன்” என்றார் இளவரசர் உறுதியான குரலில்.

“தங்களின் வாக்கே போதும் இளவரசே!” என்றார்கள் அனைத்து சிற்றரசர்களும் ஏக காலத்தில்.

“இளவரசே நாங்கள் உங்களுக்கு எப்படி உதவ வேண்டும்?” என்றார் கூட்டத்தில் ஒரு சிற்றரசர்.

“சொல்கிறேன்.” என்று கூறிவிட்டு மெல்ல தன் ஆசனத்தை விட்டு எழுந்த இளவரசர், “வன்னியசிற்றரசர்களே! இன்னும் சொற்பநாட்களில் இந்த சிங்கை நகரில் பெரும் யுத்தம் ஒன்று நிகழ இருக்கின்றது. அதற்கு தேவையான படைகள் எதிரிகளுக்கு தென்பகுதியில் இருந்து தாராளமாக கிடைத்துக்கொண்டே இருப்பார்கள். எதிரிகளின் வீரர்கள் அதிகரித்தால், அதுவும் முப்புறமாக தரைவழியாக சிங்கள வீரர்கள் புகுந்து முற்றுகையிட்டுவிட்டால், எம்மால் நிச்சயமாக வெல்ல இயலாது. காலத்திற்கும் இச்சிங்கை நகர் அடிமையாகவே இருக்க வேண்டியிருக்கும்” என்று கூறி சற்று நிறுத்தினார் இளவரசர்.

“ஆம் ஆம் கொடுமை” என்றார்கள் கூட்டத்தில் சிலர்.

“புரிகிறது இளவரசே, அவ்வாறு வரும் படைகளை இடைநடுவிலேயே முறியடிக்க வேண்டும்” என்றார் மட்டுமாநகர் வன்னியர்.

“ஆம் அதைவிட அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் தகவல் பரிமாறும் ஒற்றர்களையும் கண்காணிக்க வேண்டும்.” என்றார் இளவரசர்.

“கண்டிப்பாக, நிச்சயமாக, ஆம் அது எங்கள் கடமை” என்று கூட்டத்தில் பலவாறான ஆமோதிப்புக்குரல்கள் எழுந்தன.

இருபத்திரண்டாம் அத்தியாயம் தொடரும்..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க