சத்தியமடி கண்ணே…!

0
741

இன்றோடு பதின் திங்கள்
முடிந்த கணக்கெல்லாம்
காதலில்லை கண்ணம்மா

தொப்புள் கொடி
தூரத்து இடைவெளியாய்
என் பிள்ளை நீ என எப்படி
உரக்கச் சொல்வது கண்ணம்மா

நிந்தனைகள் நித்தம்
கனவுக்குள் கொள்ளுதடி
குளிர் நிலவும் என் இரவில்
அக்கினியை பொழியுதடி

உன் தோட்டத்து மலர்கள் வாசனை
என் நாசி தொட்டு
உன் பாதம் வந்த தடம் பேசுதடி
என் தேசத்தில் மரித்த சிலுவைகள்
மறக்கவில்லை உன் பெயரையடி

காத்திருப்பெல்லாம் காதலல்ல
காலமுடிச்சில்
கறைபட்ட சத்தியமடி
உனை தந்த இந்த உலகமே
எனை உன்னிடம்
நாளை கேட்குமடி

பிரிவொன்றுதான் தீர்வு எனில்
நேசமெல்லாம் வெறும் பொய்ப்பூச்சடி
நீ இல்லா நானும்
நானில்லா நீயும்
வாழ்வதும் சாத்தியப்படுமடி
காலம்தான் காயமாற்றியதென என்
கூன் முதுகும் ஒரு நாள் கேலி பேசுமடி

நீ என்னை நீங்கினும்
இந்த நான் நாளை
வேறு யாருக்கோ சொந்தமடி
உயிர் மட்டும் பாரமாய்
உனை பார்த்திராமலே போகுமடி….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க