கானகத்தின் அடையாளம் சிங்கங்கள்….

0
3450

 

 

 

 

 

¶ அழகிய பிடரியும் கம்பீர கர்ஜனையும் கொண்ட காட்டு ராஜாவுக்கான நாள் இன்று..
 
¶ உலகிற்கே கம்பீர அடையாளமான சிங்கங்கள் நம் இந்திய நாட்டை பொறுத்தவரை, குஜராத்தின் கிர் காடுகளுக்குள் மட்டுமே அடங்கி விடுவதால் நாம் சிங்கங்களை பற்றி தெரிந்திருப்பதும் மிகக்குறைவே…
 
¶ உலகில் அதிக நாடுகள் (15 நாடுகள்), தங்களுடைய தேசிய விலங்காக பெருமை கொண்டாடும் ஒரே விலங்கு சிங்கங்களே… காட்டு ராஜாவுக்கு சரியான அங்கீகாரம் தானே…
 
தனித்துவமான குணங்கள்:
 
1.வேகம் 
         ¶ சராசரியாக 81 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் சிங்கங்கள் காட்டின் இரண்டாவது பெரிய வேட்டையாடிகள் (முதலிடத்தில் வருபவை நம்முடைய கானக தலைவர்களான புலிகள்)…
 
2. கர்ஜனை 
          ¶ ஆண் சிங்கத்தின் கர்ஜனை கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் வரை கேட்கும். நம்முன்னோர் சிம்மக்குரலோன் என்று சரியாகத்தானே கூறியிருக்கிறார்கள்…
 
3. உணவு 
          ¶ மிக வேகமாக ஜீரணிக்கும் சக்தி கொண்டவை..
          ¶ மான், காட்டெருமை, வரிக்குதிரை, யானை, காண்டாமிருகம், நீர்யானை, காட்டுப்பன்றி, முதலை, ஒட்டகச்சிவிங்கி, முயல், ஆமை என இதன் உணவு பட்டியல் மிகப் பெரியது.
         ¶ உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை தாம் உண்ணும் உணவில் இருந்தே பெற்றுக் கொள்வதால், 4 முதல் 5 நாட்கள் கூட தண்ணீர் இன்றி இவைகளால் வாழ இயலும்… 
 
 4. வேட்டையாடுதல் 
          ¶ கூட்டமாக வாழும் விலங்குகளான இவற்றில், பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடுகின்றன..  
          ¶ வேட்டையாடிய உணவை முதலில் ஆண்சிங்கம்,  அடுத்து பெண்சிங்கம், அடுத்து குட்டிகள் என்று கட்டுப்பாட்டோடு இவை உண்ணும் விதம் அலாதியானது…
 
 
சிங்கங்களின் வகைகளைப் பற்றித் தெரியுமா….? 
 
         ¶ பேந்திரோ லியோ(Panthero leo) பேரினத்தில், 11 துணை சிற்றினங்கள் உள்ளன. அதில் 5 முற்றிலும் அழிந்து போனவை.
 
          ¶ எளிமையான வகைப்படுத்தலை பொருத்தவரை, ஆப்பிரிக்க சிங்கங்கள் (கட்டங்கா சிங்கம், காங்கோ சிங்கம், டிரான்ஸ்வால் சிங்கம், கிழக்கு ஆப்பிரிக்க சிங்கம், மேற்கு ஆப்பிரிக்க சிங்கம்) மற்றும் ஆசிய சிங்கங்கள் என்று இரு வகையாகவே பிரிக்கப்படுகின்றன.
 
            ¶ ஐரோப்பிய குகை சிங்கங்கள் மற்றும் அமெரிக்க சிங்கங்கள் 2.60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகை விட்டு மறைந்து விட்டன.
 
            ¶ சமீபகாலத்தில் மறைந்த இனம் என்று பார்த்தால் அவை கருப்பு சிங்கங்களும் (1860 களில்- பிடரிமயிர் நிறம் கருப்பு) மற்றும் பார்பரி சிங்கங்களும் ஆகும். 
ஆனால் பார்பரி சிங்கத்தை கொண்டு உருவாக்கிய கலப்பினங்கள் இன்றும் உள்ளன..
 
 
சுவாரசியமான தகவல்கள்:
 
           ¶ ஆப்பிரிக்க சிங்கங்களை ஒப்பிடும்போது ஆசிய சிங்கங்கள் அளவில் சிறியவை.
          ¶ அமெரிக்க கண்டத்தில் இன்று சிங்கங்களே இல்லை ஆனால் அழிந்துபோன அமெரிக்க சிங்கங்களே இதுவரை உலகில் வாழ்ந்த சின்னங்களில் மிகப்பெரியவை..
          ¶  இன்று உலகில் வாழும் சிங்கங்களில் பெரியவை கட்டங்கா  சிங்கங்கள் ஆகும் ..
 
காட்டு ராஜாக்களின் இன்றையநிலை:
 
            ¶ ஒரு காலத்தில் உலகின் பெரும்பான்மையான காட்டை ஆண்ட வேட்டையாடிகள் இன்றோ ஆப்பிரிக்க கண்டம் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமே உள்ளன..
           ¶ வருத்தமான இன்னொரு உண்மை என்னவெனில் 26 ஆப்பிரிக்க நாடுகளில் ஆப்பிரிக்க சிங்கங்கள் மொத்தமாக அழிந்து விட்டன..
          ¶ ஆப்பிரிக்க சிங்கங்களை பொருத்தவரை 20,000 சிங்கங்கள் காட்டில் உள்ளன.. இது ஓர் பெரிய எண்ணிக்கை அல்ல.
           ஏனெனில் ஐயுசிஎன் அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 600 சிங்கங்கள் ஆசிய மருந்து சந்தைக்காக கொல்லப்படுகின்றன.
        ¶  நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை, அரசாங்கம்  முன்னெடுத்துவரும் முயற்சிகளால் 2015 ஆம் ஆண்டு 523 என்ற எண்ணிக்கையிலிருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை, இன்று 674 ஆக உயர்ந்திருப்பது காட்டுயிர் ஆர்வலர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தியே…
           
        இயற்கை அன்னையால் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்டு ராஜாவை நாமும் அங்கீகரித்து அதன் பாதுகாப்புக்கு குரல் கொடுப்போமே…!
 
கட்டுரையாளர் 
Dr. P. P. Vanathi Devi,
Zoologist.
 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க