ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 09

0
629

ஸ்டோர் கீப்பராக  புதிய அவதாரம்

திக்ரித்திற்கு செல்லும் வண்டியில் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த மேலாளர் உட்பட நாங்கள் ஏழுபேர் இருந்தோம். செல்லும் வழியில் பாபிலோன் என்னும் இடத்தில் வண்டி நின்றது.அங்கிருந்த முகாமில் எங்களுக்கான உணவை எடுத்துகொண்டோம். மீண்டும் ஒரு ராணுவகாண்வாயுடன் இணைந்து கொண்டோம். மாலையில் திக்ரித்தில் இருந்த சதாமின் அரண்மையை அடைந்தோம். வாயிலிலேயே ராணுவம் எங்களை கீழே இறங்கச் சொல்லி வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு உள்ளே அனுமதித்தனர். அங்கே பணியாளர்தங்குவதற்கும், உணவுக்கூடம், அடுமனைக்கான கூடாரங்கள் என அனைத்தும் தயாராக இருந்தது. இறுதிக்கட்ட பணிகளில் கூடாரம் அமைக்கும் குழு தொடர்ந்து பணிசெய்துகொண்டிருந்தது .

பாபிலோனில் இருந்து கொண்டுவந்த உணவை அன்றிரவு நாங்கள் சாப்பிட்டோம். சாப்பிடதட்டு இல்லை. எங்களுடன் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்குப் பெட்டக லாரிவந்திருந்தது. அதில் சாப்பிடும் தட்டுக்களும் இருந்தன.. ஆனால், “இப்போது அவைகளைத்தேடுவது கடினம்” என்றார் அதன் ஓட்டுனர்.

என்னுடன் வந்த பாலக்காட்டு மோகனின் யோசனைப்படி கிடைத்த ஒரு சிலவர் பாயிலைதரையில் விரித்து அதில் உணவை வைத்துச் சாப்பிட்டோம். என்னுடன் வந்தவர்களில் மோகனைத் தவிர, மற்ற நால்வரும் பெங்காலிகள். பெரும்பாலான பெங்காலிகளின் கடைசிபெயர் கோம்ஸ் என்று இருக்கிறது .சதாமின்அரண்மனைஅருகில், நவீன வசதிகளுடன் இருந்த ஒரு கட்டடத்தில் நான்கைந்து அறைகளும், இரண்டு கழிப்பறையும் ,குளியலறையும் இருந்தது. அங்குதான் கூடாரம் அமைக்கும் குழு, மற்றும் எங்கள் நிறுவனத்தின் சில அதிகாரிகள் உட்பட பத்துப் பேருக்குமேல் இருந்தனர். அமெரிக்கப் பெண் ஒருத்திதான் இந்த முகாமுக்கு கேட்டரிங் மேலாளர் என்றனர். கார்த்திக் தான் அவர்களுக்கு சமையல்காரன்.

கார்த்திக் என்னைக் கண்டதும், முகம் மலர சகோதரா என கூவி தோளோடு கட்டியணைத்துக்கொண்டான். பக்குபாவின் குண்டு வெடிப்பை காலையில் அறிந்ததாகவும் ,என்னை பற்றி கவலை கொண்டிருந்ததாகவும் சொன்னான். அன்றிரவு நான் கூடாரம் செல்லவில்லை. கார்த்திக், “இங்கேயே இரு. நாளை போகலாம்” என்றான். அவனதுஅறையில் நான் தங்கிக்கொண்டேன்.

 

 

 

 


இரவை உற்சாகமாக கழிக்கும் பொருட்டு, அந்த நவீனக் கட்டிடத்தின் முன், அனைவரும் நாற்காலிகளை வட்டமாகப் போட்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அனைவரது கையிலும் தகர குவளையில் அடைத்த பீர் இருந்தது. நான் கார்த்திக்கின் அறையில், கார்த்திக்வரும் வரை தூங்காமல் இருந்தேன். நள்ளிரவுக்குப்பின் வந்த கார்த்திக், தினமும் இரவு இவர்கள் இப்படித்தான் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கின்றனர் என்றான் .

காலை எட்டுமணிக்கு என்னுடன் வந்த பெங்காலி ஒருவன், பணிக்கு அழைக்கிறார்கள் என,என்னை எழுப்பினான். அன்று மாலையில் குவைத்திலிருந்து மேலும் பணியாளர்கள் வந்தனர். அந்தக் குழுவில் என் நண்பன் லோகேஷும் வந்திருந்தான். அவனிடம், கார்த்தி இங்குதான் இருக்கிறான் என்றேன். மேலும் சில தமிழர்களை, எனக்கு லோகேஷ் அறிமுகப்படுத்தினான் .திக்ரித் சென்ற சில தினங்களிலேயே, முகாம் துவக்க விழாவுடன் சிறப்பாகத் துவங்கியது.கார்த்திக், முன்பு கடிதத்தில் ஜன்னலை திறந்தால் சலசலக்கும் நதியை பற்றிசொல்லியிருந்தான். அந்த டைகிரிஸ் நதியை பார்த்தேன். கூடாரமருகிலேயே நிறையமரங்களுடன் பசுமையாக இருந்தது திக்ரித் முகாம் .

முக்கிய அரண்மனை தூரத்தில் இருந்தது. பாதுகாப்புக் காரணங்களால் நாங்கள் அங்கு செல்லஇயலவில்லை. கார்த்திக் மட்டும் அங்கு நடந்த ஒரு விருந்துக்கு சிறப்பு அனுமதியுடன் சென்றிருந்தான். ராணுவ தலைமை கமாண்டோ அங்குதான் இருந்தார். சுற்றிலும் சின்னதும்பெரியதுமாக இருபத்தியாறு அரண்மனைகளைக்கொண்ட மிகப்பெரிய வளாகம் அது. டைகிரிஸ் ஆற்றை அரண்மனைக்குள் வரும்படி பாதை அமைத்து செயற்கையாக நீர்விழ்ச்சி அமைத்திருந்தனர். நீர்வீழ்ச்சி கீழே விழும் இடத்தில் பெரிய நீச்சல்குளமும், குளியலறை, நவீன சமையலறை போன்ற அனைத்து வசதிகளும் அருகில் இருந்தன. சர்வாதிகார மன்னன் சதாமின் ஆடம்பரம் அங்கு தெரிந்தது.

முகாமின் எதிரிலேயே குளிரூட்டி வசதியுடைய ஒரு பள்ளிவாசலும் இருந்தது மனம்நிறைவாக இருந்தது.

இங்கு நான் வந்த மறுநாளே ஸ்டோர்ஸ் மேலாளர், தென்னாப்ரிக்கா நாட்டவரான ஜாக்கிடம், “நான் ஸ்டோர்ஸில் வேலை செய்ய விரும்புகிறேன்” என்றேன் .”முன்பு ஸ்டோர்ஸில்வேலை செய்திருக்கிறாயா? ” எனக் கேட்டார். ஆம் என பொய் சொல்லி அந்தப் பணியில் எளிதாக நுழைந்துவிட்டேன். கொஞ்சம் கடினமான வேலை. ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் அதிகம் அந்தப் பணிக்கு .

சரக்குப் பெட்டக வாகனங்களில் எங்களுக்கு உணவு பொருட்கள் வரும். தினமும் ஆறு சரக்குப்பெட்டக வாகனங்களில் உள்ள பொருட்களை இறக்கி எங்களிடம் உள்ள சரக்குப் பெட்டகங்களில் அடுக்கி வைக்க வேண்டும். எங்களிடம் பொருட்களை வைப்பதற்கு மொத்தம் நாற்பது சரக்குப்பெட்டகங்கள் இருந்தது. அனைத்தையும் தனித் தனியாக பிரித்து அதற்குரிய சரக்குப் பெட்டகங்களில் வைத்திருப்போம் .

கோழி ,வான் கோழி வகைகள் (poultry), ஆடு ,மாடு ,பன்றி இறைச்சி,அதில் குட்டி ஆட்டுக்கு லாம்ப் (lamb) குட்டி மாட்டிறைச்சிக்கு வீல் (veel), மீன் ,நண்டு ,இறால் ,கணவாய்,லாப்ஸ்டர் , பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் (frozen vegetables ), ஐஸ்கிரீம் வகைகள் , பழங்கள் மற்றும் காய்கறிகள் , பழரசங்கள் ,பால் ,பால் பொருட்களான வெண்ணெய் ,பாலாடைக்கட்டி வகைகள், உலர்ந்த பழங்கள் ,உலர்ந்த கொட்டைகள், தேயிலை,காப்பி பொடிகள், அரிசி ,மைதா,சீனி,தூளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு வகைகள் , சுத்தம் செய்ய தேவைப்படும் ரசாயன பொருட்கள் ,சலவைக் கட்டிகள் என தனித்தனியாக நாற்பது சரக்கு பெட்டகங்களில் வகைப்படுத்தி ,வாரம் ஒருநாள் கணக்கும் எடுத்து சரிபார்ப்போம். தினமும் பத்தாயிரம் உணவு தயார் செய்ய தேவையான பொருட்களைக் அடுமனைக்குக் கொடுக்க வேண்டும் . ஒரு மேற்பார்வையாளர் உட்பட நாங்கள் பத்துபேர் ஸ்டோர்ஸில் இருந்தோம். ஒரு வெள்ளைக்கார மேலாளரும் உண்டு எங்களுக்கு. புதிய பணியை விரைவாக கற்றுக்கொண்டு எளிதாக நாட்கள் நகர தொடங்கியிருந்தது .

 

 

 

 

எங்களுக்கு ஒரு டெம்போவும் ,பொருட்களை ஏற்றி ,இறக்க பயன்படும் போர்க் லிப்ட் வாகனமும் இருந்தது . நான்கைந்து பேர் எல்லா வாகனமும் ஓட்டுவோம் . நான் ஓட்டுனர் உரிமம் வாங்கி ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் முழுமையாக வாகனம் ஒட்டியது ஈராக்கில் தான் . கைதிருந்தியது என்பார்களே அப்படி ஒரு அனுபவம்.

இங்கு வந்த புதிதில் என்னுடைய பிரிட்டிஷ் மேலாளர் ஒருவன் என் வயதையுடையவன் தான் “ஷாகுல் வண்டி ஓட்டத் தெரியுமா” எனக் கேட்டான் ஆம் என்றேன் . சாவியைக் கொடுத்து, எடுத்துவா என்றான் . அங்கே போய் பார்த்தால், அது ஒரு மினி பஸ். நான் முன்னர் ஓட்டினதே இல்லை.தலையை சொறிந்துவிட்டு ,இடப்பக்க ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து சாவி துவாரத்தைதேடினேன் .மிக எளிதாக வண்டி இயங்கத் தொடங்கியது .தைரியமாக முன் நகர்த்தி கொண்டுசென்றேன் .

“இவர்களை தொலைபேசி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்” என்றான் மேலாளர் . ஆறுபேர் ஏறிக்கொண்டனர் . அனைவரும் சரக்குப் பெட்டக ஓட்டுனர்கள். எகிப்து ,லெபனான் ,சிரியாநாட்டைச் சார்ந்தவர்கள் . நான் வாகனம் ஓட்டுவதை பார்த்துவிட்டு இவன் ஓட்டுனர் இல்லைஎனச் சொல்லி வண்டி போய்கொண்டிருக்கும் போதே ஓட்டுனர் இருக்கையிலிருந்து எழுந்துவெளியே வரச்சொன்னான் ஒருவன். நானும் எழுந்து விட்டேன் அப்படியே மாறி அவன்ஓட்டினான் . அவர்கள் அனைவரும் தொலைபேசியில் பேசி முடித்து வந்ததும் நான் எனக்குத் தெரிந்த அரபியில், “என்னிடம் கார் இல்லை . இதுதான் எனக்கு வாய்ப்பு வண்டி ஓட்டிப் பழக” என்றேன். அவர்களும் ஒத்துக்கொண்டு என்னையே ஓட்ட அனுமதித்தனர் .

இங்கு கார்த்திக் சொன்னது போல் ஒருநாளும் குண்டு வெடிக்கவில்லை . புதிய வேலையில் இயல்பாக ஒன்றிவிட்டேன். வெள்ளிக்கிழமைகளில் ஜும்மாதொழுகையும் ,புதிதாக வந்த நபர்களுடன் நட்பும் கொண்டு மகிழ்ச்சியான நாட்கள் ஆரம்பமாகி இருந்தது .

தொடரும்….

குறிப்பு : இத் தொடர் கதையில் பிரசுரிக்கப்படும் படங்கள் அனைத்துமே அந்தந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நிஜப்புகைப்படங்களாகும். கதையோடு ஒன்றிக்கும் வாசகர்களுக்கு மேலும் சுவாரஷ்யத்தை கூட்ட இங்கு பதிவிடுகின்றோம்.

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க