ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 31

0
555

 

 

 

 

 

 

திக்ரித் பாக்தாத் திகில் பயணம்

கண்ணிலிருந்து மறைவதுவரை, சதாமின் அரண்மனை முகப்பை நோக்கியிருந்தேன். வண்டியின் முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர வண்டி முழு வேகத்துடன் செல்ல ஆரம்பித்த பின்தான் அது ஒரு திகில் பயணம் என்பதை உணர்ந்தேன். முன்பும் பின்பும் உள்ள வாகனங்கள் வளைவுகளில் இரு பக்கவாட்டுகளில் வலது இடது எனவந்து எங்கள் வண்டியை தொடரும். பொதுவாக பயணங்களில் ஒரு இலக்கும், உத்தேசமாக சென்றுசேரும் நேரமும் பயணிப்பவர்களுக்கு தெரியும். எனது அன்றைய திக்ரித்–பாக்தாத் பயணத்தில் இலக்கை சென்று சேருவேனா? என்ற உறுதியற்ற பயணமாக துவங்கியிருந்தது. வண்டியுனுள் ஒரு பதட்டமும், மனதில் பயமும் நிறைந்திருந்தது. யாருடனும் பேசிக்கொள்ளவேயில்லை. அதுவும் மனம் இறுக்கமாக இருக்க ஒரு காரணமாயிற்று .

கந்தலாடையணிந்த மக்கள், இடிபாடுகளுடன் கட்டிடங்கள் என திக்ரித் நகரம் போரில் சிதைந்து காணப்பட்டது. சாலையெங்கும் ராணுவவீரர்கள், துப்பாக்கி ஏந்தியபடி வாகனங்களில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தனர். நாங்கள் வந்துகொண்டிருந்தபோது ஓரிடத்தில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்தது. அது ஒருவழிப்பாதை. எங்கள் வாகனங்கள் நின்றதும் துப்பாக்கியுடன் எங்கள் பாதுகாப்பு வீரர்கள் கீழிறங்கி எங்கள் வண்டியை சுற்றி நின்றுகொண்டனர். எதிர்த் திசையில் வாகனங்கள் வரத்தொடங்கியதும் எங்கள் வண்டியை திருப்பி எதிர்த் திசையில் உள்ள சாலையில் போக சொன்னார் குழுவின் தலைவர் அது ஒரு வழி பாதை . எதிரில் வரிசையாக வாகனங்கள் வந்துகொண்டிருந்தது. வண்டியை நிறுத்தவேண்டாம், மெதுவாக போய்க்கொண்டே இருங்கள் என்றான் குழுத்தலைவன்.

 

 

 

 

 

சில ராணுவ வாகனங்கள் எதிரில் வந்தபோது மட்டும் லேசாக வேகத்தைக் குறைத்து அவர்களை பார்த்து கையசைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. அவர்களும் வெள்ளைக்கார்களை கண்டுவிட்டால் ஒரு புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள். ஒரு கிலோமீட்டருக்கு பின்னரே மீண்டும் சரியான சாலையில் எங்கள் வாகனங்கள் பயணிக்க ஆரம்பித்தது. அதுவரையில் பாதுகாப்பு வீரர்கள் ஓடும் வண்டியின் கதவுகளுக்கு வெளியேதான் நின்றுகொண்டிருந்தனர்.

இரண்டரை மணிநேர பயணத்துக்குப்பின் ஒரு முகாமுக்கு சென்று சேர்ந்தோம். அங்கே ஒருவர் இறங்கிக்கொண்டார். அங்கிருந்த உணவுக்கூடத்தில் மதியஉணவு சாப்பிட்டுவிட்டு பின் பறப்படுவோம் என்றனர். நான் இரண்டு சீஸ் சாண்ட்விட்சும், ஒரு டி போர்ன் ஸ்டேக்கும் சாப்பிட்டேன். முன்பே குறிப்பட்டதுபோல இருவர் அங்கிருந்து பாக்தாத் செல்லும் பொருட்டு எங்களுடைய வண்டியில் ஏறிக்கொண்டனர். என்னை வேறொரு வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னார்கள். இப்போது நான் முன்னால் செல்லும் வண்டியில் இருந்தேன். அந்த வண்டியின் ஓட்டுனர் ஈராக்கி. அவர் ஈராக்கிய உடையணிந்திருந்தார். அதுவும் பாதுகாப்பு யுக்திதான். முன் இருக்கையில் இருக்கும் குழுத்தலைவனின் உத்தரவுப்படி வண்டியின் வேகத்தை குறைத்தும், கூட்டியும் ஓட்டவேண்டும். உள்ளூர் ஈராக்கிக்கு ஆங்கிலம் தெரியாது. குழுத்தலைவன் சொல்லும் உத்தரவுகளை நடு இருக்கையில் என் அருகில் இருந்த வீரன் ஒருவன் அரபியில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தான்.

 

 

 

 

 

 

பாக்தாத் நகரை நெருங்கும்போது எங்கள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு ஈராக்கியின் கார் நின்றுவிட்டது. மூவ் மூவ் என்றபடியே எங்கள் வீரர்கள் கீழே இறங்கிவிட்டனர். எங்களுடைய வண்டிகள் செல்ல வழியில்லாதவாறு சாலையின் நடுவே அந்தக் கார் பழுதாகி நின்றது. அந்தக் காரின் ஓட்டுனர் எவ்வளவோ முயன்றும் வண்டியை நகர்த்த இயலவில்லை .

எங்கள் குழுத்தலைவன், எங்கள் காரோட்டியிடம் “புஷ் ஹிம்” என்றார். அதை அரபியில் மொழி பெயர்த்ததும் கரோட்டி பழுதாகி நின்ற அந்த வண்டியின் பின்புறத்தில் மெதுவாக மோதித் தள்ளிக்கொண்டு பக்க வாட்டில் நிறுத்தி சாலையில் வழியை உருவாக்கினான். அதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த வண்டிக்காரன் அரபியில் திட்டிக்கொண்டிருந்தான். எதோ கெட்டவார்தைகள் என நினைத்துக் கொண்டேன். இது என்ன அராஜகம் எனத் தோன்றியது. சொந்த நாட்டிலேயே சுதந்திரம் பறிக்கப்பட்டு, அந்நியர்களால் துன்புறுத்தப்படும் நிலையில் ஈராக்கிய மக்கள். மாலையில் பாக்தாத் வந்து சேர்ந்தோம். மனதிலிருந்த பரபரப்பும், பதட்டமும் கொஞ்சம் குறைந்திருப்பதை உணர்ந்தேன்.

பாக்தாத் சாலைகளை அந்தக் காலத்திலேயே மிக நேர்த்தியாக உருவாக்கியிருந்திருக்கிறார்கள். இங்குள்ள உள்கட்டமைப்புகளை (பாலங்கள் , சாலைகள் …) உருவாக்கியதில் இந்தியர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர். இப்போது சரியான பராமரிப்பின்றியும், அழியாத போர்ச்சுவடுகளுடனும் இருக்கிறது. உலகமே நாலுகால் பாய்ச்சலில் முன்நோக்கிச் செல்லும்போது, ஈராக் பின்நோக்கி செல்லும் அவலம்.

பாக்தாத்தின் சாலையில் ஒரு வண்டி என்னை அழைத்துச் செல்லத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அதனருகில் நிறுத்தி எனது பயணப் பையை எடுத்துக்கொள்ளுமாறு சொன்னார்கள். என்னை அழைத்துவந்த குழுவின் தலைவன் என்னிடம் “நாங்கள் வேறு முகாமிற்கு செல்கிறோம். இவர்கள் உன்னை விடுதியறைக்கு அழைத்துச் செல்வார்கள்” என்றார். நான் அணிந்திருந்த கவச உடையையும், தலைக் கவசத்தையும் திரும்ப வாங்கிக்கொண்டனர்.

குழுத்தலைவனுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி கூறினேன். அவர்கள் சிறிதும் தாமதிக்காது புறப்பட்டு சென்றனர். என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த விடுதியின் மேலாளர் தலை வெளியே தெரியாதவாறு வண்டியினுள் குனிந்து அமர்ந்து கொள்ளுமாறு சொன்னார். பத்து நிமிட பயணத்தில் விடுதியை அடைந்ததும் என்னிடம் வண்டியிலிருந்து இறங்கி வேகமாக விடுதிக்குள் செல்லுமாறு சொன்னார்.

அவர்களே எனது பயணப் பைகளை கொண்டு வந்து தந்தனர். முன்பு விடுமுறையில் ஊருக்குச் செல்லும்போது நான் தங்கியிருந்த அதே விடுதி. அங்கிருந்த மேலாளரும், சில பணியாளரும் நான் ஏற்கனவே சந்தித்தவர்கள். ஒரு அறைச் சாவியை தந்து போகச் சொன்னார்கள். நிறைய இந்தியர்கள் அங்கே தங்கியிருந்தனர். பெரும்பாலானோர் நான் பணி செய்த நிறுவனத்தை சார்ந்தவர்கள். கடந்தமுறை இங்கு தங்கியிருந்தபோது சிலரை விடுதியிலிருந்து வெளியே சென்று பாக்தாத் நகரை சுற்றிவர அனுமதித்தனர். இப்போது விடுதியின் வரவேற்பறைக்கு அருகில் வரவேண்டாம் எனவும் அறையிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தினர். இரவில் கோதுமையில் செய்து தீயில் சுட்ட குப்புசும், உப்பும், மிளகுத்தூள் இட்ட அவித்தகோழியும் தந்தனர். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது மிக அருகில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன். பின்பு தூக்கமே இல்லை. அது பழகிய சப்தம்தான். ஆனால் அன்று அது ஒரு பய உணர்வை தந்தது.

 

 

 

 

 

 

விடுதியில் காலையில் நிறைய இந்தியர்களை சந்தித்தேன். கடந்த பலநாட்களாக இங்கு தங்கியிருப்பவர்கள், சிலர் ஊருக்கு செல்வதற்கும், சிலர் வேறு முகாமிற்கு செல்வதற்காகவும் விடுதியில் இருப்பதாக சொன்னார்கள். இங்கே இந்திய உணவு கிடைப்பதில்லை. எனவே விடுதியில் தங்கியிருக்கும் சிலர் ஒன்று சேர்ந்து சாதமும், கறியும், கூட்டும் சமைப்பதாகவும் விடுதி மேலாளர் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதாகவும் அறிந்தேன். மதிய சமையலுக்கு என்னையும் உதவி செய்யும்படியும் வேண்டினர். அரிசி சோறும் , கோழிக் குழம்பும் ,வெள்ளரிக்காய், காரட், தக்காளி, வெங்காயம், காப்சிகம் சேர்த்த சாலடும் செய்தார்கள். நான் சாலடுக்கான காய்களை நறுக்கிக்கொடுத்தேன்.

எப்போது நான் இந்தியா செல்வேன் என எந்தத் தகவலும் இன்றி இரு தினங்கள் கழிந்தது. விடுதி மேலாளரிடம் கேட்டேன். “உன் நிறுவன ஆட்கள் வருவார்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களுக்கு எதுவும் தெரியாது” என்றார். மீண்டும் ஊர் செல்லும் நாளை எதிர்பார்த்து பாக்தாத் விடுதியறையில் காத்திருந்தேன்.

 

 

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க