29.2 C
Batticaloa
Saturday, January 31, 2026
முகப்பு கதைகள் அனுபவப் பகிர்வுகள் ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23

0
864

 

 

 

 

 

 

முகாமில் நடந்த விருந்து

கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை. அக்டோபர் மாதம் தட்பவெப்ப நிலை நன்றாக இருக்கும். டிசம்பரில்-2 பாகை வரை செல்லும். நல்ல குளிர். ஊரில் (கன்னியாகுமரி) அதிக வெயிலை பார்த்ததே இல்லை அதிகபட்சம் 34-37தான் எங்களூரில், குளிர் தெரியவே தெரியாது.

நல்ல குளிர் நாளில் ராணுவ வீரன் ஒருவர் என்னிடம் கேட்டார் “உங்களூரில் இவ்வளவு குளிர் இருக்கிறதா” என. “குளிரே தெரியாது எங்களுக்கு” என்றேன். நான் இந்தியாவின் தென்கோடியில் வசிப்பவன் அங்கு நிலவுவது ஒரு மித சீதோஷ்ணநிலை. குறைந்தபட்சம் 22 பாகையும் (டிசம்பரில்) அதிகமாக 35 பாகையும் (மே-யில் ) இருக்கும். வடஇந்தியாவில் கோடையில் அதிக வெப்பமும் 46 பாகை, குளிர் காலத்தில் பூஜ்யம் வரையும் இருக்கும் என்றபோது. ஆச்சரியத்துடன் “நீ வாழும் தென்கோடி முனை …… கொடுத்து வைத்தவர்கள்” என்றான்.

அக்டோபர் இறுதியில் குளிர்காலத்தின் துவக்கம், டிசம்பர் மாதத்தில் திக்ரித் நகரில் பனிப்பொழிவும் இருந்திருக்கிறது. நான் இங்கிருந்த இரு குளிர்காலத்திலும் பனிப்பொழிவை காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. திக்ரித்தில் குளிர் துவங்கும்முன் நாம் ஒரு பார்பிக்கியூ ( BBQ) பார்ட்டி நடத்தலாம் என்றார் எங்கள் முதன்மை மேலாளர் ஆலன் குக். எங்களில்பலருக்கு தணலில் சுட்டு சாப்பிடும் பார்பிக்கியூ முறை பரிச்சியமில்லை. அதனால் அந்த சூழல் இயல்பாக ஒருகொண்டாட்ட மனநிலையை உருவாக்கியிருந்தது.



எங்களிடம் இருந்த அனைத்தும் பதப்படுத்தப்பட்டு, குளிரூட்டியில் வைத்து பாதுகாக்கப்படும் உணவுவகைகள். பார்ட்டிக்காக புத்தம் புதிய இறைச்சிகள் சமைக்கலாம் என்றார் ஆலன் குக். எனவே எங்கள் முகாமில் தினக் கூலிகளாக வேலை செய்ய வருகின்ற ஈராக்கிசெய்து ஹுசைனிடம் “இரண்டு ஆடுகளின் இறைச்சி வேண்டும். உன்னால் கொண்டு தர முடியுமா?” எனக் கேட்டார் ஆலன் குக். அவர்சொன்னதை விஜயன் அரபியில் மொழி பெயர்த்துச் சொன்னான் ஹுசைனுக்கு.

ஆலன் குக் சமையல் கலையில் நீண்டகால அனுபவமுள்ளவர் . அடுமனையில் ராணுவ வீரர்களுக்காக தயார் செய்யப்படும் அனைத்து உணவுகளையும் அவர் சுவைத்து பார்ப்பார். தலைமை சமையல்காரர்களில் ஒருவரான கோம்ஸ் என்னிடம் சொல்வான் “இவரின் நாக்கு நன்றாக சுவையை அறிந்து கொள்ளக்கூடியது ,யாரும் இவரை ஏமாற்ற முடியாது” என. பார்ட்டிக்கு புத்தம்புதிய இறைச்சிளை அவர் விரும்பியது சுவைக்காகவே.

மறுநாள் காலையில் செய்து ஹுசைன் வரும் போது, ‘ம்மே, ம்மே’ என சப்தத்துடன் கையில் கயிறுகளை பிடித்திருந்தான். திக்ரித் நகரில் வளர்ந்த இரண்டு ஆடுகள் அவனுடன் வந்து கொண்டிருந்தது. ஆடுகளை முகாமின் தங்கும்கூடாரத்தின் அருகில் பச்சை நிறத்தில் சீரான வரிசையில் நின்றிருந்த ஆலிவ் மரம் ஒன்றில் கட்டினான். ஆலிவ் இலைகள் கரும் பச்சையாகவும் காய்கள் இளம் பச்சை நிறத்திலும் இருந்தது. கருமை நிற ஆலிவ் காய்களையும் பார்த்திருக்கிறேன். ஆடுகள் இரண்டும் ஒரே தாயின் குட்டிகளை போல இருந்தன. உடல் முழுவதும் கருமையாகவும் ,தலை காதுகள் மற்றும்கால் மூட்டுகளுக்கு கீழே வெண்ணிறத்திலும் இருந்தது. ஆடுகளின் சப்தம் கேட்டு ஆலன் குக் வந்து பார்த்துவிட்டு வாய்விட்டு சிரித்தார்.

 

 

 

 



“இரண்டு ஆட்டின் இறைச்சியைக் கேட்டால் ஆட்டையே கொண்டுவந்திருக்கிறாய்?” என கேட்டார். “என்னிடம் ஆடு தானேகேட்டீர்கள் அதான் கொண்டுவந்தேன்” என்றான்ஹுசைன்.
“இன்று மாலை ஆடுகளை கொண்டுபோய்விட்டு நாளை அறுத்து கறியை மட்டும் கொண்டுவா” என்றார். இம்முறை மொழிபெயர்க்க ஆலன் குக் வேறு ஆளை தேடினார். முந்தையநாள் மொழி பெயர்த்த விஜயன் எங்கும் தென்படவில்லை.

மறுநாள் மாலை பாதியாக வெட்டப்பட்ட பீப்பாயில் (ட்ரம்) கரியை போட்டு மேலே இரும்புக் கம்பியால் ஆன ஜாலியை வைத்து பார்பிக்கியூ அடுப்பு தாயாராகி இருந்தது. கரி எரிந்து செந்நிறத்தில் தக தகவென கணன்று கொண்டிருந்தது.இஞ்சியும், பச்சைமிளகாயும்,பூண்டும் சேர்த்து அரைத்த கலவையுடன், கரம் மசாலா, மிளகு பொடி, மஞ்சள், வத்தல்,கொத்தமல்லி, ஜீரகபொடிகளை,ஆலிவ் எண்ணையுடன் உப்புசேர்த்து காலையிலேயே ஊறவைத்திருந்த புத்தம் புதியஇறைச்சியில் மட்டன் கபாப் ,மட்டன் சுக்கா என இந்திய சுவையில் செய்து ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பியதைசுடச்சுட சாப்பிட்டனர். அனலென ஆரஞ்சு சிவப்பில் உள்ள தணலில் கைகளில் உள்ள மயிர்கள் கருகாமல் இறைச்சியைபதமாக வேகவைப்பது சிலருக்கு மட்டுமே இயலும். பொறுமையாக தணலின் மேலே இருக்கும் மெல்லிய இரும்புஜாலியின் மேல் இறைச்சியை வைத்துவிட்டு விலகிச்சென்றால் மேற்பகுதி கரிந்துவிடும். உள்ளே வேகாமல் பச்சையாகஇருக்கும்.

அருகிலேயே நின்று நீளமான கம்பியால் அல்லது இடுக்கியால் கைகளில் சூடு கொள்ளாதமுறையில் ,புரட்டி , திருப்பி,மறித்து வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கருகாமலும், முறுகாமலும் சாப்பிட பதமான வகையில்வெந்து கிடைக்கும். அதன் சுவை நாவை அதற்கு அடிமையாக்கிவிடும்.

இறால், மீன் போன்றவற்றை அப்படியே வைத்து வேக வைக்க முடியாது. சில்வர் பாயிலில் பொதிந்து குறைவான வெப்பத்தில் நீண்டநேரம் வைத்து எடுத்தால் அதன் சுவையே தனி . தனக்காகவும், பிறருக்காகவும் ருசியாக, அன்பு கலந்து சமைப்பது ஒரு தனித் திறமை. எனது வாப்பும்மா, அரிசியை உலை வைக்கும் போதும் , முறுக்கு சுடும்போதும் ,ஆழ் மோன நிலையில் ,சின்னக் குழைந்தைகள் யாரும்அருகில் வராதவாறு பார்த்துகொள்வார்கள். சமைப்பதை ஒரு தியானம் போல செய்வார்கள்.

முகாமில் விருந்து நடந்தபோது ஒவ்வொரு சமையல் கலைஞனும் தன் திறமையைக் காட்ட விதவிதமான உணவுவகைகளை செய்திருந்தனர் , ஆவியில் வேக வைத்து உப்பும்,மிளகு தூளும் தூவப்பட்ட மீன்(கேட் பிஷ் ) அதனுடன்ஒரு சிறு துண்டு எலுமிச்சை,கேரள பாணியில் தேங்காய்,மல்லி,வத்தல் மிளகாய் சோம்பு சேர்த்து வறுத்து,அரைத்து செய்தமீன் குழம்பு ,சோழ மாவு தடவிய இறால் பொரித்தது ,இளம் கோழியின் ஒரே அளவிலான தரம்பிரிக்கபட்ட கால்களின் துண்டுகளை மிதமான காரத்துடன் பொரித்தது ,கணவாய் மீன்களை துண்டுகளாக வெட்டி அதை சில்வர் பாயிலில்பொதிந்து தணலில் இட்டு வேகவைத்தது.

 

 

 

 



வடஇந்திய நண்பர்கள் புலாவ், சப்பாத்தி, ஆலு பரோட்டா (roti with stuffed potato ), பருப்புக்கறி என செய்து அசத்தினர். சிறு துண்டுகளாகவெட்டிய ஆப்பிள் பழத்துடன், மெல்லிசாக சீவிய காரட், உலர் திராட்சை, மையோனஸ் சேர்த்து செய்த கோல் சிலா எனும் சாலட்சுவைமிகுந்ததாக இருந்தது. அனைவரும் இன்முகத்துடன் சாப்பிட்டனர். உடன் பணிசெய்த அனைத்து அதிகாரிகளும்,உணவுக்கூடத்தில் பணியிலிருக்கும் ராணுவ வீரர் , வீராங்கனைகளும் ஒன்றாய் அமர்ந்து கதைகள் பேசி இரவு பதினோரு மணிவரைநீண்டது அந்த விருந்து.

அனைவருக்கும் அது ஒரு நிறைவான ஒரு அனுபவத்தை அளித்தது. தினமும் பனிரெண்டு மணிநேர கடும்பணி, குண்டு வெடிப்புபோன்றவற்றால் சலிப்புற்ற மனங்களுக்கு ஒரு தற்காலிக விடுதலையாக இருந்தது அந்த விருந்து. அந்த அனுவபவம் மனதிலிருந்துவிலகும்முன் அடுத்த மாதம் எங்களுடன் இருந்த கலீல் பாய் ,அவரது மகள் சம்ரீனின் பிறந்தநாளை கொண்டாடினார். முந்தையதை போலவே அனைவரும் கலந்துகொண்ட விருந்து அது. இம்முறை உணவு வகைகள் உணவுக்கூடத்தில் செய்திருந்தோம்.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks