ஈசன் – அத்தியாயம் 4: திருமாலும் அவதாரங்களும்

0
217
4. Vishnu-2acbb554

திருமால் அல்லது பெருமாளை வைணவ சமயத்தின் ஸ்ரீவைஷ்ணவ மரபைப் பின்பற்றுபவர்கள் வணங்கி வருகின்றனர். சங்க காலத்தில் சொல்லப்பட்ட திருமால் வேறு. இக்காலத்தில் வணங்கப்படும் திருமால் வேறு. சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய ‘மாயோன்’ என்ற முல்லை நில தெய்வம் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு ‘கருமை நிறம் கொண்டவன்’ என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ‘பரிபாடல்’ என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன.

சங்க காலத்திற்குப் பிறகுதான், திருமால் என்பவர் காக்கும் கடவுளாக கருதப்பட்டார். ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் காக்கும் கடவுளாக கருதப்பட்ட திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், கி.பி. 6 ம் நூற்றாண்டு முதல் 9 ம் நூற்றாண்டுக்குள் இயற்றப்பட்டவை. இந்த பாடல்களை, 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பவர், 12 ஆழ்வார்கள் பாடிய பாடல்களை தொகுத்து ‘ஆழ்வார்கள் அருளிய செயல்கள்’ என பெயரிட்டார்.

பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களாவன. 1) பொய்கை ஆழ்வார், 2) பூதத்தாழ்வார், 3) பேயாழ்வார், 4) திருமழிசை ஆழ்வார், 5) நம்மாழ்வார், 6) திருமங்கையாழ்வார், 7) தொண்டரடிப் பொடி ஆழ்வார், 8) பெரியாழ்வார், 9) ஸ்ரீ ஆண்டாள், 10) குலசேகர ஆழ்வார், 11) மதுரகவி ஆழ்வார் மற்றும் 12) திருப்பாணாழ்வார் ஆவார்கள். பன்னிரு ஆழ்வார்களில், ஸ்ரீ ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.

திருமாலை பற்றி தமிழ் புராணங்களான திருவெம்பாவை, திருவாசகம், திருமந்திரம் மற்றும் தேவாரம் கூறுவதை காண்போம்.

திருவெம்பாவை என்பது சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து, மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். திருவெம்பாவை பாடல் 20 ல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

இந்த பாடலில் வரும், ‘மால் நான்முகனும் காணாத புண்டரீகம்’ என்ற வார்த்தைகளுக்கு ‘திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத, தாமரை போன்ற பாதங்களை உடைய இறைவன் சிவபெருமான்’ என்று பொருள்.

இதே கருத்தினை, மாணிக்க வாசகர், திருவாசகத்தில் வரும் ‘குழைத்த பத்து’, பாடல் எண் 6 ல் இவ்வாறு பாடியுள்ளார்.

வேண்டத் தக்கது அறிவோய் நீ,

வேண்ட முழுவதும் தருவோய் நீ,

வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீ யாது அருள் செய்தாய்,

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,

அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

இதன் விளக்கம், பிரம்மனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள். ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை. எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய் என்பதாகும்.

பன்னிரு திருமுறைகள் என்பவை சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை, திருமூலர் எழுதிய திருமந்திரமாகும். படைக்கப்பட்ட காலத்தினை வைத்து பார்க்கும்போது, திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. திருமந்திரத்தின் முதல் தந்திரத்தின் பெயர் சிவபரத்துவம். இதில், திருமூலர் பாடல் எண் 9 ல் இவ்வாறு பாடியுள்ளார்.

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி

அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல

முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.

இதன் விளக்கம், எங்கும் நிறைந்தவன் இறைவன் சிவபெருமான். அவனது பரவியிருக்குந் தன்மையானது, வியாபகமாகிய பெருநிலை எனவும் அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட இறைவனை, அயன், மால் இருவரும் தேடி காணாமல் அல்லற்பட்டார்கள் என்பது சான்றுள்ள வரலாறாகும்.

தமிழ் புராணங்கள், இறைவன் சிவ பெருமானை இவ்வாறு வர்ணிக்கின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையும் ஒருங்கே செய்வது இறைவனாகிய பரமேஸ்வரனால் மட்டுமே சாத்தியமான ஒன்று. ‘சிவம்’ என்ற ‘பரம்பொருள்’ ஒருவரே சிறப்புக்குரியவர். அவரே, எல்லோருக்கும் முன்னோடி. பிறப்பும், இறப்பும் இல்லாதவர்.

காலங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை, தேவ ஆண்டு, பூலோக ஆண்டு. பூலோகத்தில் ஒரு வருடம் என்பது, தேவலோகத்தில் ஒரு நாள் ஆகும். பிரம்மாவுக்கும், மகா விஷ்ணுவுக்கும் ஆயுட்காலம் உண்டு. விஷ்ணுவின் ஆயுள் காலம் சிவபெருமானுக்கு கண் இமைக்கும் நேரம் ஆகும்.

இதே கருத்தினை, திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடலில் இவ்வாறு பாடியுள்ளார்.
நூறு கோடி பிரமகர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்கனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறி லாவன் ஈசன் ஒருவனே

இதன் விளக்கம், நூறு கோடி பிரம்மாக்கள் அழிந்தனர்; ஆறுகோடி திருமால்களும் அவ்வாறே அழிந்தனர். நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ்வண்ணமே ஆயின. முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய சிவபெருமான் மட்டுமே என்பதாகும்.

மேற்கண்ட தமிழ் புராணங்களின்படி, சிவ பெருமான் ஒருவனே இறைவன். இறைவனை காண முடியாத திருமாலாகிய விஷ்ணுவும், பிரம்மாவும் எப்படி இறைவனாக இருக்க முடியும்? இறைவன் ஆரம்பமும் முடிவும் இல்லாதவன்.  விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் ஆயுட்காலம் உண்டு. அழிவில்லாதவனே இறைவன். அழியக்கூடிய விஷ்ணுவும், பிரம்மாவும் இறைவன் கிடையாது என்பதை ஆணித்தரமாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார் என்பது ஆழ்வார்களின் கூற்று. அவையாவன; 1) மச்சாவதாரம், 2) கூர்மாவதாரம், 3) வராக அவதாரம், 4) நரசிம்ம அவதாரம், 5) வாமன அவதாரம், 6) பரசுராம அவதாரம், 7) ராமாவதாரம், 8) பலராம அவதாரம் 9) கிருஷ்ண அவதாரம் மற்றும் 10) கல்கி அவதாரம்.

இவை, மனித உருவங்கள், விலங்குகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் என வெவ்வேறு அவதாரங்களாகும். தமிழ் ஆகமங்களின் ஒரே வரி முடிவுரை, திருமாலே இறைவன் இல்லை எனும்போது திருமாலின் அவதாரங்கள் எப்படி இறைவனாகவோ அல்லது இறை அவதாரமாகவோ இருக்க முடியும்? என்பதாகும்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க