இது விடியலா இல்லை அஸ்தமனமா? (இறுதிப்பகுதி 12)

0
1025
*பகுதி 12* 
 
ராஜேஷும் பிஸினஸிலேயே மூழ்கி விட்டான். வாரத்தில் ஒரு நாள் என்றது மாதத்திற்கு ஒரு நாள் என்றபடியாகி பின் சில மாதங்களுக்கு ஒரு முறை என்றதாகி விட்டது. இப்போது தனக்கும் தனது கணவனுக்கும் உள்ள இடைவெளி அதிகமாயிற்றே என்பதை பவித்ரா உணர்ந்தாலும் தன் கணவர் தன்னைப் பற்றி கவலை கொள்வதில்லை என அவள் ஒரு போதும் அவருடன் சண்டை செய்வதில்லை. அந்த அளவிற்கு அவர் மீது அன்பு கொண்டிருந்தாள்.
 
ராஜா தோலுக்கு மேலால் வளர்ந்திருந்தாலும் எப்போதும் தனது தாயைச் சுத்திச் சுத்தியே வந்திருந்தான். இதுவே பவித்ராவிற்குப் பெரும் ஆறுதலாய் இருந்தது. தனது ஆரம்ப வாழ்க்கை நண்பர்களால் கெட்டு விட்டது போன்று தனது மகனின் வாழ்க்கையும் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்தானோ என்னவோ ராஜாவை ஆரம்பத்திலிருந்தே அதிக நண்பர்களிடம் பழக விடவில்லை ராஜேஷ். அதனால் அவனுக்கு சிறந்த தாயாகவும் தோழியாகவும் இருந்தாள் பவித்ரா.
 
காலம் யாரைத்தான் விட்டு வைக்கின்றது. நல்ல நண்பர்களையும் உண்மையான அன்பு கொண்ட உறவுகளையும் பிரித்துப் பார்த்து ரசிப்பதே இதன் தலையாய தொழிற்பாடாச்சே. ஆரம்பத்தில் ராஜேஷை குடும்பத்தில் இருந்து பிரித்தது. தற்போது பவித்ரா ராஜா இருவரும் அம்மா மகன் என்றாலும் அவர்களையும் பிரித்துப் பார்த்து ரசிக்கத் துடித்தது காலம். ராஜா தனது மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டிய தருணமே அது.
 
அம்மாவின் நிலையினைக் கருதி அவன் ஆரம்பத்தில் சம்மதிக்காமலே இருந்தான். பவித்ராவிற்கும் தனக்கு இருக்கும் ஒரு அன்பான துணையை இழக்கப் போகின்றோம் என்ற வருத்தம் இருந்தாலும் தனது அற்பத் தேவைக்காக அவன் வாழ்வு கெட்டுவிடக் கூடாது என நினைத்து அவன் சம்மதிக்கும் படி அறிவுரை கூறி அவனை சம்மதிக்க வைத்தாள்.
[பவித்ரா தான் அறிவுரை கூறுவதில் எக்ஸஸ்பேர்ட் ஆச்சே யாராவது கேட்காமல் இருப்பார்களா என்ன? ]
 
ராஜா தனது மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றாலும் தனது ஆரம்ப நாட்களில் தாயுடன் பேசாது தூங்கிய நாட்களே இல்லை என்று கூறும் அளவு தனது வேலைகள் முடிய எத்தனை மணி நேரம் ஆனாலும் அவனுடன் பேசி விட்டே தூங்கச் செல்வான். நாட்கள் செல்லச் செல்ல அவனுக்கும் அங்கு ப்ரெக்டிகல் ட்ரைனிங் என வேலைகள் அதிகமாக அவனும் பிஸியாகி விட்டான்.
 
எனினும் தந்தை இல்லாத போது தன் தாய் பட்ட துன்பங்களை பக்கத்திலிருந்து பார்த்தவன் அல்லவா? அதனால் பலத்த சிரமத்துக்கு மத்தியில் தினமும் அவளுடன் பேசியே வந்தான். தன் மகனின் நிலையினைப் புரிந்து கொண்ட பவித்ரா அவனுக்கு ப்ரியான நேரத்தில் மாத்திரம் அவனை அழைத்துப் பேசும் படி கூறியிருந்தாள். அதனையும் அவன் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டான்.
 
ராஜாவால் கூட இப்போதெல்லாம் பவித்ராவுடன் ஓர் இரு வாரங்களுக்கு ஒரு முறையே பேச முடிந்தது. பாவம் பவித்ரா அன்பிற்கு ஏங்கும் பாத்திரமாய் பரிதவித்துப் போனாள். தன் உறவினர்கள் அவ்வப்போது வந்து சென்றாலும் அவர்கள் வருகையின் நோக்கம் வேறானதே அதனால் அவர்களிடம் அன்பினை அவளால் எதிர்பார்க்க முடியவில்லை. ஆயிரம் வசதிவாய்ப்பு இருந்தும் அவளுக்கு அது பயனற்றுப் போனது.
 
பட்டுப்புடவைகள் முத்துக்கள் பதித்த நகைகள் அனைத்தும் இருந்தும் அதனை அணிவித்து அழகு பார்ப்பதாகக் கூறிய கணவன் தன் அருகே இல்லாததும் ஆயிரம் பணிப்பெண்கள் இருந்தும் அம்மா கையால் தான் சாப்பிடுவேன் என்று கூறும் அன்பு  மகனும் அவளருகே இல்லாதது அவளுக்கு வெறுமையையே உண்டு பண்ணியது. தற்போது இருப்பது அவளிடம் ஒரே ஒரு கேள்வியே அது
“இது விடியலா இல்லை அஸ்தமனமா? ” என்ற கேள்வியே!
 
[ வாசகர்களே நீங்களே கூறுங்கள் இது விடியலா இல்லை அஸ்தமனமா என்று! ]
 
முற்றும்.
முந்தைய கட்டுரைGlobal King Tekno
அடுத்த கட்டுரைவாழ்ந்திடு மனிதா…
எனது பெயர் அப்துல் றஹீம் பாத்திமா றஸாதா. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பொதுப் பட்டம் பெற்ற நான் எனது பல்கலைக்கழக காலம் தொட்டு எழுத்துத் துறையில் என்னால் ஆன முயற்சிகளைச் செய்து வருகின்றேன். எனது ஆக்கங்களில் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதோடு இன்னும் சில razathawrittingblogspot.com என்ற எனது பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துக்களின் மூலம் சமூகத்திற்கு சில செய்திகளைத் தெரிவிப்பதே எனது நோக்கமாகும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க