அவனின் அவள்

0
2001

அன்றொருநாள் உயர் கோபுரம் உடைய பெருமாள் கோவிலின் முன்றலில் கிளை பரப்பிய வாகை மரம், அதன் அருகில் ஓர் ஆண்மகன், அவனின் கண்களில் ஏதோ ஓர் ஆர்வம், கைகளில் ஏதோ ஒரு துடிப்பு அவன் சட்டை பையில் நீட்டி நிமிர்ந்து வெளித்தெரிந்தது ஒரு காகிதம். அதில் சிவப்பு மையில் கிறுக்கிய ஓவியத்தின் சிறுபகுதி ஒன்று தெளிவாய் இல்லை என்றாலும் குறைவாய் வெளித்தெரிந்தது. அவனின் கால்கள் தரையில் நிற்கவே இல்லை. குதிக்கவோ பறக்கவோ நடக்கவோ ஓடவோ ஏதேதோ முயற்சிகளை செய்த வண்ணம் அங்குமிங்குமாய் தடுமாறி, எத்திசை புக எவ்வண்ணம் திரும்பட்டும், என்று அங்கும் மிங்குமாய் ஆடியது. சுயாதீனமாய் தொங்கிய அவன் கைகள் அடிக்கடி தலைமுடியை கோதி சரிசெய்துகொண்டதுடன் தாடியையும் இடையிடையே தடவிக்கொடுத்தது. அதிக நேரம் இல்லை ஒரு பதினைந்து நிமிடம் அவ்வாறு நின்றிருப்பான்.

எங்கிருந்தோ அவன் கண்களில் புகுந்து தெளிந்து மிளிர்ந்தது ஒரு பேரொளி, காலை வேளை மலரின் மொட்டு மலர்வது போலவே அவன் உதட்டில் இலேசாய் மலர்ந்தது மர்மமான மந்திரப்புன்னகை, அவ்வேளை அங்கே வீசிய வாகை மரத்து தென்றல் காற்று அவன் மேனி வருடி தலை கோதி செல்ல, உடல் முழுதும் புல்லரிக்க, அவன் கண்கள் சற்றே அகலமாய் விரிந்து ஆர்வம் துளிர்க்க தூரமாய் நோக்க, ஆங்கே வெண்ணிலவதனை பாகாய் உருக்கி சிற்பமாய் வடித்த சிலையவள், அன்னமும் வேண்டி விரும்பி நடை பழகிடும் நடையழகி, கொடியும் தோற்றிடும் இடையழகி, அவளின் செவ்விதழ் அதன் முன் பூவிதழ் நாணும், கண் விழி அதனை மானே நோக்கி அசூசை கொள்ளும், அவள் பேரழகு வதனமதை வானுலக தேவதைகளும் வியந்து நோக்கும். வந்தாள் ஒரு மானிட தேவதை, மின்னலாய் அவன் கண்முன் தோன்றினாள். அவள் அவனின் கண்களை பறித்துவிட வந்த மின்னல் அல்ல, அவனின் நெஞ்சத்தில் முளைத்திட்ட மின்னல். கணநேர மின்சாரம் அவனுக்கு உடல் மீது பாய, நொடிப்பொழுதில் உடல் சிலிர்க்க, அவளை நேருக்கு நேராய் கண்முன்னே பார்த்த அக்கணத்தில், அவனுடைய இதயத்தில் எத்தனை எண்ணங்கள் பூத்தனவோ, என்னவெல்லாம் தோன்றியதோ.

கணநேரம் உண்டான குறுங்கால பிரமையில் இருந்து வெளிவந்தவனாய் அவன் சட்டைப்பையில் இருந்த அந்த காகிதத்தை வெளியே எடுத்தான், கண்களில் ஒற்றினான், மேல அண்ணாந்து வான்முகடதனை நோக்கி நெற்றியில் விரல் வைத்து இதயத்திலும் பதித்து நிமிர்ந்தான். அவன் கைகள் துடித்தன. கால்கள் தடுமாறின, உடல் சிலிர்த்து புல்லரித்தது. அவனின் உடல் இலேசானது போல் உணர்ந்தான். கால்களற்று போய் வெற்றுடலாய் மிதப்பதாய் உணர்ந்தான், என்னவெல்லாம் மாற்றம் அவனடலில், எதுவுமே தெரியவில்லை அவனுக்கு, அவனுடைய பாதங்கள் மெல்ல முன்னேறி அந்த மான்விழியாளை நோக்கி நகர்ந்தன. தன் கண்ணருகில் மலர் அன்ன அவள் வதனம் கண்டு, பூவின் தேன் கண்ட தேனீயென அத்தனை ஆவலாய் விரிந்தது அவன் முகம், அவள் வதனத்தை அத்தனை நெருக்கமாய் நோக்கிய அக்கணம் ஓயாமல் பேசிடும் அவனின் வாயிலும் எவ்வித வார்த்தையும் வெளிவரவில்லை. அண்ணத்தில் ஒட்டிய நாவை தடுமாறி மீட்டெடுத்து, கன்னக்குழி காட்டி சிரிக்கும் அப் பாவை முன் அப்பாவியாய் நின்றான். நடுங்கிய தன் கரங்களால் தடுமாறி அக்காகிதத்தை பொற்சிலையாம் அவள் பால் நீட்டினான், மாலை நேரத்து சூரியகாந்தியென தலை கவிழ்ந்து நிலம் நோக்கி அவள் அக்காகிதத்தை வாங்கினாள். தரை நோக்கிய தாமரை, அவளின் கால் பெருவிரல் தரைமீதில் கோலமதை வரைய, பொன்முகத்தாள் தன் இதழை அசைத்து மெல்ல பேசினாள்,

இதை சொல்ல உனக்கு இத்தனை நாளா?

அவளின் உதடு உதிர்த்த அந்த பதில் கேட்டான், அவன் உள்ளம் குதித்தது, இதயம் மூளைய நோக்கி “கனவா இது?” என்றது. அவன் இந்திர லோகத்து சிம்மாசனமே தனக்கீயப்பட்டது போலுணர்ந்து ஆழ்மனதின் இன்ப உணர்வில் மிதந்தான், சொர்க்கமதனில் கானமிசைத்து காற்றில் பறந்தான், காதல் இன்பத்தில் மூழ்கித்திளைத்தான். எவ்விடம் தேடினும் கிடையாத அற்புத உணர்வது, எத்தனை கோடி கொட்டி கொடுப்பினும் கிடையா இன்பமது, எத்தனை தவமியற்றினும் பெறமுடியா வரமது. அரை நொடி நேரம் அதனில் அரை நூற்றாண்டு இன்பமாய் வாழ்ந்தான், அக்காதல் அளித்த அற்புத உணர்வின் பயனாய்.

முற்றும்

90 kid காதல் கதை

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments