அல்லி ராணி

0
1169

நிம்பேயேசியே (Nymphaeaceae) எனப்படும் அல்லிக்குடும்பத்தைச்சேர்ந்த   விக்டோரியா அமேசானிக்கா  (Victoria Amazonia) அல்லிகளே உலகிலிருக்கும் அல்லிகளில் மிகப்பெரியவை.

தென் அமெரிக்காவை தாயகமாகக்கொண்ட இவற்றை அமேசான் நதியிலிருந்து  தாடியாஸ் ஹீன்கி என்பவர் ( Tadeáš Haenke)  1801ல் கண்டறிந்து (Euryale amazonica) யூரியேல் அமேசானிகா  எனப்பெயரிட்டார்.

1849ல் ஜோஸப் பாக்ஸ்டன் என்பவரால் (Joseph Paxton) இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியா மகாராணியை கவுரவிக்கும் விதமாக  இதன் தாவரவியல் பெயர் விக்டோரியா ரீஜியா  (Victoria regia)  என மாற்றப்பட்டு   முதல் மலர் விக்டோரியா மகாராணிக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இப்பெயர்  20 ஆம் நூற்றாண்டில்தான் விக்டோரியா அமேசானிக்கா என்று மாற்றப்பட்டது.

 

 

 

 

 

நீரின் மேற்பரப்பில் மிதக்கும் இவற்றின் இலைகள் மூன்று மீட்டர் அகலம் உடையவை. ஓரங்கள் மடங்கி  அகலமான தட்டுப் போலிருக்கும், இலைகளின் அடிப்பகுதி இளஞ்சிவப்பில் கூரிய முட்களுடன் இருக்கும். இவை நல்ல தடிமனுடன் உறுதியான 7–8 மீ நீளமுள்ள நீரினடியிலிருக்கும் காம்புகளால் தாங்கப்படுவதால் சுமார் 30 கிலோ வரை எடையைத்தாங்கும்.

 இரவில் மலரும் இதன் அழகிய  நல்ல நறுமணமுள்ள 40 செமீ அளவுள்ள   மிகப்பெரிய மலர்கள் இரண்டு நாட்களில் வாடிவிடும். முதல் நாளில் வெண்மையாகவும் , வண்டுகளால் மகரந்தசேர்க்கை முடிந்த அடுத்தநாளில் இளஞ்சிவப்பிலும் இருக்கும் இவற்றின் உள்ளிருக்கும் மித வெப்பத்தால் வண்டுகள்  இரவு  முழுவதும் மலர்களின் உள்ளேயே தங்கி , அடுத்தநாள் உடல் முழுதும் ஒட்டியிருக்கும் மகரந்தத்துடன் வெளியேறி  இன்னொரு மலரைத் தேடிச்செல்லும். 

 

40லிருந்து 50 இலைகளுடன் 12 மீட்டர் வரை அகலமாக நீரில் வளரும் இவை அருகில் வேறு தாவரங்களை வளரவிடாது. மிக அகன்ற இலைகள்   சூரிய ஒளியை தடுப்பதால்   இதன் அடியிலும் நீர்ப்பாசிகள்  கூட வளர்வதில்லை.

 26-32டிகிரி வெப்பத்தில் மட்டுமே மிக வேகமாக  வளரும் இவை அமேசான் நீரல்லி, அரச அல்லி விக்டோரியா அல்லி,   என பலபெயர்களில் அழைக்கப்படும் இவை லண்டனின் பெரிய தாவரவியல் உள்ளடக்கங்களைக் கொண்ட  கியூ தாவரவியற் பூங்காவில் (Kew Botanical gardens) பெரிய நீர்நிலைகளில் வளர்க்கப்படுகின்றன.

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க