அருவுருவங்கள்

0
651
power-of-gaia

விம்பங்கள் பல உருவாகின
மனிதனின் சிந்தனைகள் போல
அந்த விம்பங்களுக்கு
நிலை இருக்கவில்லை

மானிடன் உயிர் கொடுத்தான்
ஆனாலும் அவை பேசவில்லை
உடைந்து போனான் மானிடன்
செய்வதறியாது தவித்தான்

தன் மாயவிம்பங்களை
அதனுள் புகுத்தினான்
தன் எண்ணங்களை
அதனுள் திணித்தான்
தன் சித்தாந்தத்தை கொண்டு
அதை செதுக்கினான்
ஆனாலும் விம்பங்கள் பேசவில்லை

இன்னும் ஒரு மானிடன்
கூர்ப்படைந்தான்
விம்பங்கள்
தோற்றுவிடலாம் என
எண்ணினான்.
உருவம் அற்ற
அருவங்களை உண்டாக்கினான்.
அருவங்களுக்கு உயிர் கொடுத்தான்
அருவங்களும் பேச மறுத்தன

உருவங்களும் பேசவில்லை
அருவங்களும் பேசவில்லை
சிந்தனையின் எல்லை வரை
சென்றான்

உருவங்கள் பேசுகின்றன
அருவங்கள் பேசுகின்றன என
அவை பேசாததை ஏடுகளில் பதிப்பித்தான்
நம்பினர்
உருவங்கள் பேசுவதாய் சிலர்
அருவங்கள் பேசுவதாய் சிலர்

உருவங்களும் அருவங்களும்
பலதாய் பிரிந்தன
மானிடன் முட்டாளானான்
அருவுருவங்கள் உண்டாகின
அருவுருவங்களில்
தன்னை அடிமையாக்கினான்

மானிட சிந்தனை இன்னும் நீண்டது
அவை பொறாமையாக மாறியது
யுத்தங்கள் பல வெடித்தன
இரத்தங்கள் பல தெறித்தன
உயிர்கள் நசுங்கின

அவன் சிந்தனை
அப்போதும் மாளவில்லை
அருவுருவங்கள் பெயரால்
படித்துக்கொண்டே சென்றான்
செல்கிறான்
அப்போதும் அவை பேசவில்லை

இறுதியில்
உண்மையான அருவுருவங்கள்
பேச ஆரம்பித்தன
பேசுகின்றன
இயற்கை எனும் பெயரில்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க